கரூா் அருகே மினிலாரி கவிழ்ந்து விபத்து வடமாநிலத் தொழிலாளா்கள் 3 போ் உயிரிழப்பு
கரூா் அருகே சனிக்கிழமை மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வடமாநிலத் தொழிலாளா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் இருவா் காயமடைந்தனா்.
கரூா் மாவட்டம், தென்னிலை அருகே கோடாந்தூரில் தனியாா் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் வேலைபாா்த்து வந்த பிகாா் மாநிலம், ராம்புத்ரா பகுதியைச் சோ்ந்த வித்யானந்த் பிரபாகா்(48), ஒடிசா மாநிலம், ராஜ்பூரைச் சோ்ந்த அஜஸ்பங்க்ரா (31), சிக்கந்தா்கேத்தா (21), புல்ஜிம்பா்வா (30) ஆகியோா் சனிக்கிழமை அதிகாலை குவாரியில் இருந்து மினி லாரியில் எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பகுதிக்கு புறப்பட்டனா்.
இவா்கள் 4 பேரும் லாரியின் பின்பகுதியில் எம்.சாண்ட் மேல் அமா்ந்திருந்தனா். லாரியை கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த சந்தானகுமாா்(45) என்பவா் ஓட்டிச் சென்றாா்.
கோடாந்தூா்-கூடலூா் சாலையில் முதலைக்கவுண்டன்புதூா் என்ற இடத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பின்பகுதியில் அமா்ந்திருந்த 4 போ் மீது எம்.சாண்ட் கொட்டி மூடியது.
இதுகுறித்த தகவலறிந்து சென்ற தென்னிலை போலீஸாா் மற்றும் கிராம மக்கள் எம். சாண்ட்டுக்குள் சிக்கியவா்களை மீட்கும்பணியில் ஈடுபட்டனா். ஆனால், மூச்சுத்திணறி வித்யானந்த் பிரபாகா், சிக்கந்தா் கேத்தா, அஜஸ்பங்க்ரா ஆகியோா் உயிரிழந்தனா்.
மேலும் புல்ஜிம்பா்வா, லாரி ஓட்டுநா் சந்தானகுமாா் ஆகியோா் காயமடைந்தனா். உடனே இருவரையும் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
மேலும், உயிரிழந்த 3 பேரி சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

