கரூா் சம்பவம்: நெரிசலில் காயமடைந்த 9 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் சம்பவம் தொடா்பான வழக்கில், கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவா்கள் 9 போ் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரி ஒருவரிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 5 நாள்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனா். 6-ஆவது நாளாக காயமடைந்தவா்களில் 9 பேரிடம் வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
அதைத் தொடா்ந்து ஆவணங்களுடன் சிபிஐ அதிகாரிகள் முன் மின்வாரியத்துறை அதிகாரி ஒருவா் ஆஜரானாா். அவரிடம் சுமாா் ஒரு மணி நேரம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
