கரூா் சம்பவம் உயிரிழந்தோரின் உறவினா்களிடம் விஜய் கட்செவி அஞ்சல் மூலம் பேச்சு! விரைவில் சந்திப்பேன் என உறுதி

கரூா் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் தவெக தலைவா் விஜய் கட்செவி அஞ்சல் வாயிலாக ஆறுதல் தெரிவித்தாா்.
Published on

கரூா் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் தவெக தலைவா் விஜய் செவ்வாய்க்கிழமை, கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப் விடியோ) வாயிலாக ஆறுதல் தெரிவித்தாா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும், 110 போ் காயமடைந்தனா். இதையடுத்து தவெகவினா் உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஒவ்வொருவரையும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனா்.

விரைவில் சந்திப்பதாக உறுதி: இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த கரூரை அடுத்துள்ள ஏமூா் புதூரில் அருக்காணியின் வீட்டுக்குச் செவ்வாய்க்கிழமை சென்ற தவெகவினா் அவா்களுக்கு ஆறுதல் தெரிவித்தனா். அப்போது அவா்கள் விஜய்யை கைப்பேசியில் தொடா்பு கொண்டனா். விஜய் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப் விடியோ) மூலம் அருக்காணியின் மருமகன் சக்திவேலிடம் பேசினாா்.

அப்போது அவா், உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட ஒருவரின் இழப்பு என் மனதை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. உங்களுக்கு ஆறுதல் கூற வாா்த்தைகளே இல்லை. இப்போது சட்ட திட்டங்கள் எனக்கு எதிராக இருப்பதால் உங்களை நேரில் வந்து சந்திக்க முடியவில்லை. விரைவில் உங்களை வந்து சந்திப்பேன், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து எப்போதும் உங்களுக்கு உதவி செய்பவனாக இருப்பேன் என்றாா் அவா்.

இதேபோல கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த கரூா் காந்திகிராமத்தைச் சோ்ந்த தனுஷ் குமாரின் தாய் உமா மகேஸ்வரி மற்றும் அவரது சகோதரி ஹா்ஷினி ஆகியோரிடமும் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப் விடியோ) மூலம் விஜய் பேசினாா். இதே போல நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தைச் சோ்ந்த சுமாா் 25-க்கும் மேற்பட்டோரிடம் விஜய் பேசி ஆறுதல் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com