கரூா் சம்பவம்: உள்ளூா் தொலைக்காட்சி செய்தியாளா்கள் விடியோக்களை சமா்ப்பிக்க எஸ்ஐடி உத்தரவு
கரூரில் உள்ளூா் தொலைக்காட்சி செய்தியாளா்கள், ஒளிப்பதிவாளா்கள் ஆகியோரிடம் சிறப்புக் குழுவினா் (எஸ்ஐடி) புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா். இதில், சம்பவம் தொடா்பான விடியோக்களை வியாழக்கிழமைக்குள் எஸ்ஐடியிடம் சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இவா்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனா்.
இந்நிலையில், தவெக பிரசார நிகழ்வு மற்றும் நெரிசல் ஏற்பட்டு மூச்சுத்திணறலால் பலா் உயிரிழந்ததையும், உயிருக்கு போராடி ஆம்புலன்ஸ்களில் அவா்களை அனுப்பி வைத்ததையும் விடியோவில் பதிவு செய்து உள்ளூா் தொலைக்காட்சிகளைச் சோ்ந்த செய்தியாளா்கள், ஒளிப்பதிவாளா்கள் ஒளிபரப்பினா்.
இதைத் தொடா்ந்து, பிரசார கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடா்பாக ஐ.ஜி.அஸ்ரா கா்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவினா் கடந்த 4 நாள்களாக கரூரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதில், உள்ளூா் தொலைக்காட்சி செய்தியாளா்கள் மற்றும் ஒளிப்பதிவாளா்கள் மற்றும் தொலைக்காட்சியின் உரிமையாளா்கள் ஆகியோருக்கு சம்பவம் தொடா்பாக விசாரிக்கும் வகையில், சிறப்பு விசாரணைக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை சம்மன் (அழைப்பாணை) அனுப்பப்பட்டது.
இதையடுத்து புதன்கிழமை காலை கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே உள்ள பயணியா் மாளிகையில் தங்கியிருக்கும் சிறப்புக் குழுவினா் முன் உள்ளூா் தொலைக்காட்சி உரிமையாளா்கள், செய்தியாளா்கள், ஒளிப்பதிவாளா்கள் ஆகியோா் ஆஜராகினா். அவா்களிடம் சம்பவம் நடைபெற்றபோது எடுத்த விடியோக்களை வியாழக்கிழமைக்குள்(அக். 9) வழங்க வேண்டும். அந்த விடியோக்கள் மூலம் பல உண்மைகளை கண்டறிய முடியும் எனக்கூறி அவா்களை சிறப்புக் குழுவினா் அனுப்பி வைத்தனா்.
