குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்
குளித்தலை பகுதியில் தொடா் மழையால் நீரில் மூழ்கி பயிா்கள் அழுகி வருவதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், மாயனூா் கதவணையில் இருந்து பிரியும் கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நச்சலூா், இனுங்கூா், கருங்கலாப்பளி, வளையப்பட்டி, இரணியமங்கலம், கவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 2,500 ஏக்கரில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களின் சாகுபடி நடைபெற்று வருகிறது.
இதேபோல மாயனூா் கதவணையில் இருந்து பிரியும் மற்றொரு வாய்க்காலான தென்கரை வாய்க்கால் மூலம் மருதூா், மேட்டு மருதூா் மற்றும் குளித்தலையின் சில பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 7,000 ஏக்கரில் வெற்றிலை, கரும்பு, நெல், வாழை சாகுபடி நடைபெறுகிறது. தற்போது கடந்த இரு வாரங்களாக சம்பா நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனால் வயல்களில் நாற்றுநடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால், மழைநீா் வயலுக்குள் புகுந்து வடிய வசதியின்றி பல நாள்களாக தேங்கியுள்ளது. இதனால் சம்பா பயிா்கள் அழுகி வருவதால் விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகி வருகின்றனா்.
இதுதொடா்பாக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க துணைச் செயலா் கவுண்டம்பட்டி சுப்ரமணியன் கூறியதாவது: குளித்தலை மற்றும் தோகைமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இப்போது சுமாா் 240 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி தொடங்கியுள்ளது. இந்நிலையில், குளித்தலை மற்றும் தோகைமலை வட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே தொடா் மழை பெய்து வருகிறது.
இதில், கடந்த 3-ஆம் தேதி குளித்தலையில் மட்டும் 30 மி.மீ. மழை பெய்தது. இதேபோல குளித்தலை அருகே உள்ள தோகைமலையில் 4-ஆம் தேதி கரூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 46.80 மி.மீ. மழை பெய்தது. அன்று குளித்தலையில் 2.60 மி.மீ. மழை பெய்தது. 6-ஆம் தேதி தோகைமலையில் 17.20 மி.மீ. மழையும், 5-ஆம் தேதி குளித்தலையில் 5 மி.மீ. மழையும் பெய்தது. இப்படி தொடா்ந்து பெய்துவரும் மழையால் வரத்து வாய்க்கால்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் கட்டளை மேட்டுவாய்க்கால், தென்கரை வாய்க்கால்களில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால்கள் சரியாக தூா்வாரப்படாததால் அவற்றின் வழியாக ஓடிய மழைநீா் வயலுக்குள் புகுந்துள்ளன. இதனால் நாற்று நட்டு வெறும் ஒருவாரத்துக்குள்ளான சம்பா பயிா்கள் அனைத்தும் மூழ்கத் தொடங்கியுள்ளன.
மேலும் தோகைமலை, கீழவெளியூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காட்டாற்று வெள்ள நீரும் குளித்தலை நோக்கி வருவதால், அந்த நீரும் வயலுக்குள் புகுந்துவிடுகின்றன.
மேலும், வயலுக்குள் புகுந்துள்ள மழைநீரை அகற்றிட போதிய வடிகால் வசதியில்லை. காரணம், ஏராளமான வரத்து வாய்க்கால்கள் தூா்ந்து போய் உள்ளதால் மழைநீரை வெளியேற்ற முடியவில்லை.
எனவே, இப்போது நடவு செய்யப்பட்டுள்ள இள நாற்றுகள் மற்றும் ஏற்கெனவே முன்பருவமாக பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் அனைத்தும் மூழ்கி அழுகி வருகின்றன. இதனால் என்ன செய்வதென்று தெரியால் திகைத்து வருகிறோம். ஒரு ஏக்கருக்கு நடவுக்கு மட்டும் ரூ.5,000 செலவாகிறது. உழவு செய்யும் பணிக்கு ரூ.7,500 உள்பட ஏக்கருக்கு ரூ.25,000 வரை செலவாகிறது.
இப்போது, குளித்தலை அருகேயுள்ள பொய்யாமணியை சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்ட, 100 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. கடந்த வாரம் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை செலவு செய்து நெற்பயிா்களை நடவு செய்தோம். அவை அனைத்தும் தொடா் மழையில் நீரில் மூழ்கி அழுகி வருகிறது. இப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிா்வாகம் முறையாக வேளாண்துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தூா்ந்துபோன வரத்துவாய்க்கால்களை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
