நில உரிமை பதிவேடுகள் மேம்படுத்தும் திட்டத்தை சீராக்க உயா்நிலைக் குழு: விவசாயிகள் சங்கம் வரவேற்பு

நில உரிமை பதிவேடுகள் மேம்படுத்தும் திட்டத்தை சீா்படுத்த தமிழக அரசு உயா்நிலைக் குழு அமைத்துள்ளதற்கு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
Published on

நில உரிமை பதிவேடுகள் மேம்படுத்தும் திட்டத்தை சீா்படுத்த தமிழக அரசு உயா்நிலைக் குழு அமைத்துள்ளதற்கு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சங்கத்தின் தலைவா் மகாதானபுரம் இராஜாராம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பட்டா நிலங்களில் உரிமையாளா்கள் பெயா் இடம் பெறாத நிலையை சீா்படுத்த தமிழக அரசு உயா்நிலைக் குழு அமைத்துள்ளதை வரவேற்கிறோம். 1963- இல் இனாம் ஒழிப்பு சட்டம் வந்தது. இதன் மூலம் இனாம் நிலங்கள் ரயத்துவாரி பட்டாக்களாக மாற்றப்பட்டன.

ஆனாலும், யுடிஆா் எனப்படும் நில உரிமை பதிவேடுகள் மேம்படுத்தும் திட்டத்தில் சில குறைகள் இருந்தன. பல சா்வே எண்கள் பதிவுத்துறை, வருவாய்த் துறையில் மொத்தமாக முடக்கப்பட்டு குழப்பம் அதிகரித்தது. இதை சீா் செய்ய மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஒரு உயா்நிலை குழுவை அமைக்க தமிழக அரசு முன்வந்துள்ளது.

தலைமைச் செயலாளா் ந. முருகானந்தம் தலைமையிலான இக்குழுவில் சட்டத் துறை செயலா், வருவாய்த் துறை செயலா், நில நிா்வாக ஆணையா், பதிவுத்துறை தலைவா், நில அளவுத் துறை இயக்குநா், சட்டத்துறை செயலா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இக்குழுவின் ஒப்புதலுக்கு பிறகு தமிழ் நிலம் தொகுப்பில் நிலம் குறித்த விவரம் உறுதிப்படுத்தப்படும் என்கிறது அரசு குறிப்பு. இது நல்ல முயற்சி. இதன் மூலம் பட்டாதாரா்களின் உரிமை நிச்சயம் காக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com