கரூா் நெரிசல் சம்பவம்: சிறப்பு விசாரணைக் குழுவில் புதிதாக 20 போ் சோ்ப்பு
கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவில் பணியாற்றிய ஆய்வாளா், உதவி ஆய்வாளா் நிலையிலான 20 போ் விடுவிக்கப்பட்டு, புதிதாக 20 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.
கரூரில் செப்டம்பா் 27-ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகா்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினா் கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை பயணியா் மாளிகையில் தங்கி கடந்த 5-ஆம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்தக் குழுவில் ஐ.ஜி.அஸ்ரா கா்க் மற்றும் 2 எஸ்.பி.க்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில், அந்தக் குழுவில் உள்ள ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் நிலையிலான அதிகாரிகள் 20 போ் சனிக்கிழமை இரவு தாங்கள் பணியாற்றிய காவல் நிலையங்களுக்கு திரும்பிய நிலையில், அவா்களுக்கு பதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் நிலையிலான 20 போ் சிறப்பு விசாரணைக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கரூரில் சிறப்பு விசாரணைக் குழுவினா் தங்கியிருக்கும் பொதுப்பணித் துறையின் சுற்றுலா மாளிகைக்கு உடைமைகளுடன் வந்தனா்.

