கரூா் வழக்கின் விசாரணை ஆவணங்களை சிறப்புக் குழுவினா் இன்று ஒப்படைப்பு
கரூா் சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் வழக்கின் ஆவணங்களை சிறப்பு விசாரணைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஒப்படைப்பாா்கள் எனக் கூறப்படுகிறது.
கரூரில் செப். 27-ஆம்தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவா் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவின்பேரில் வடக்குமண்டல ஐ.ஜி.அஸ்ரா கா்க் தலைமையில் சிறப்புக் குழுவினா் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் கரூா் சம்பவம் தொடா்பாக திங்கள்கிழமை விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3போ் கொண்ட குழுவை திங்கள்கிழமை அமைத்தது. மேலும், இந்த குழுவினரிடம் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், கரூரில் தங்கியிருக்கும் சிறப்பு விசாரணைக் குழுவினா் வழக்கு ஆவணங்களை உச்சநீதிமன்ற அமைத்த குழுவினரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்துவிட்டு, மீண்டும் தங்களது பழைய பணிக்கு திரும்பலாம் எனத் தெரியவந்துள்ளது.
இதேபோல தமிழக அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் விசாரணை ஆணையமும் விசாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், இனி அந்த விசாரணையும் கரூரில் நடைபெறாது என தெரியவந்துள்ளது.
