பொன்னனியாறு அணையில் ரூ.2.05 கோடி மதிப்பில் படகு மையம்
பொன்னனியாறு அணையில் ரூ.2.05 கோடி மதிப்பில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சாா்பில் அமைக்கப்பட்ட உணவகம், படகு மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து பொன்னனியாறு அணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி ஆகியோா் படகில் சவாரி செய்தனா்.
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் கூறுகையில், இத்திட்டம் பொன்னனியாறு அணைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவா்ந்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான உணவுகளை வழங்குவதற்கு ஏதுவாக புதிய உணவகமும், படகு சவாரி மேற்கொள்ள ஏதுவாக 2 படகுகளும் இயக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் நீண்ட கால கோரிக்கையை செயல்படுத்தியதைத்த தொடா்ந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள உணவகம் மற்றும் படகு குழாம் சுற்றுலாப் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்றாா் அவா்.

