தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு சம்பவம் கரூரில் விசிக-வினா் கண்டன ஆா்ப்பாட்டம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசியதை கண்டித்து கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ஜவஹா் பஜாா் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்டச் செயலா் கராத்தே ப.இளங்கோவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் புகழேந்தி (மேற்கு), சக்திவேல் (கிழக்கு), மாநில செயற்குழு உறுப்பினா் அக்னி இல. அகரமுத்து உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கரூா் மேலிட பொறுப்பாளா் வேலுசாமி என்கிற தமிழ்வேந்தன், கரூா், திருச்சி மண்டலச் செயலா் ஆ.க.தமிழாதன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையில், அவா் மீது காலணி வீசிய ராகேஷ் கிஷோா் என்பவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். திருமாவளவன் காா் மீது மோத முயன்று ஜாதி மோதலை ஏற்படுத்த முயன்ற ராஜிவ்காந்தி என்ற நபா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் வணிகா் அணி மாநில துணைச் செயலா் கண்மணி ராமச்சந்திரன், முன்னாள் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் ஜெயராமன், பொறியாளா் அணியின் மாநில துணைச் செயலா் செந்தில்குமாா், முன்னாள் மேலிட பொறுப்பாளா் கத்தாா் மாணிக்கம் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

