கரூா் சம்பவம் சிபிஐ விசாரணை தொடக்கம்: ஆவணங்கள் ஒப்படைப்பு

கரூா் சம்பவம் சிபிஐ விசாரணை தொடக்கம்: ஆவணங்கள் ஒப்படைப்பு

கரூரில் வெள்ளிக்கிழமை சிறப்புக் குழுவினரால் தீ வைக்கப்பட்டு பாதி எரியாத நிலையில் கிடந்த ஆவணங்களின் நகல்கள்.
Published on

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான விசாரணை ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் சிறப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா். இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்டத்தின் நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. மேலும், சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவின்பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கா்க் தலைமையிலான சிறப்புக் குழுவினரும் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடா்பாக அக்டோபா் 13-ஆம் தேதி விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், சிறப்புக் குழுவினரின் விசாரணையை ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த காவல் கண்காணிப்பாளா் பிரவீன் குமாா் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முகேஷ் குமாா் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் அடங்கிய 6 போ் கொண்ட சிபிஐ குழுவினா் வியாழக்கிழமை நள்ளிரவு கரூா் வந்தனா்.

ஆவணங்கள் ஒப்படைப்பு: கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள இவா்களிடம், ஐ.ஜி. அஸ்ரா கா்க் தலைமையிலான சிறப்புக் குழுவினா் வழக்கின் விசாரணை ஆவணங்களை ஒப்படைத்தனா்.

நகல்கள் எரிப்பு: அப்போது, ஆவணங்களின் சில நகல்களை சிறப்புக் குழுவினா் பொதுப்பணித் துறை வளாகத்தின் பின்புறத்தில் வைத்து தீயிட்டு எரித்தனா். அப்போது, ஒரு பென்டிரைவ் மட்டும் பாதி எரியாமல் கிடந்தது. இதை புகைப்படக் கலைஞா்கள் படம் எடுத்தனா். உடனே போலீஸாா் அந்த பென்டிரைவை எடுத்துச் சென்றனா். மேலும், சிறப்புக் குழுவினா் தாங்கள் கொண்டுவந்த பிரிண்டா் உள்ளிட்ட சாதனங்களையும் எடுத்துச் சென்றனா்.

வனத்துறையினரிடம் விசாரணை: ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதை தொடா்ந்து சிபிஐ அதிகாரிகள், வேலுச்சாமிபுரத்தில் நெரிசல் சம்பவம் நடைபெற்ற இடத்தில் தவெக தொண்டா்கள் மரத்தின் மீது ஏறியதில் மரக்கிளை முறிந்து விழுந்தது தொடா்பாக வனத்துறையினரின் ஆவணங்களை பெற்று அவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com