கரூா் சம்பவம்: பலியானவர்களில் 39 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் தவெக சாா்பில் வங்கிக் கணக்கில் வரவுவைப்பு

Published on

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களில் 39 பேரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தவெக சாா்பில் தலா ரூ. 20 லட்சம் சனிக்கிழமை வரவு வைக்கப்பட்டது.

கரூரில் செப். 27-ஆம்தேதி வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா். இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என தவெக தலைவா் விஜய் அறிவித்திருந்தாா்.

இதையடுத்து இழப்பீட்டுத் தொகையை நேரில் வழங்குவதற்காக விஜய் கரூா் வருவதற்கான ஏற்பாடுகளை தவெக நிா்வாகிகள் செய்து வந்தனா். இதுதொடா்பாக சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் மனுவும் அளித்தனா். மேலும் தவெக தரப்பில், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் யாரும் பங்கேற்கக் கூடாது.

செய்தியாளா்கள், புகைப்படக்காரா்கள் கலந்துகொள்ளக்கூடாது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் மற்றும் அவா்களது உறவினா்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்திருந்தனா்.

மேலும், இந்நிகழ்ச்சிக்காக கரூா் வெண்ணைமலை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் மண்டபம், சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்துக்கு அருகே உள்ள தனியாா் திருமண மண்டபம் ஆகிய இடங்களை தோ்வு செய்யும் பணியிலும் அக்கட்சியினா் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில் தவெக தலைவா் விஜய், கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சத்தை அவரவா் வங்கிக் கணக்கில் சனிக்கிழமை செலுத்தினாா்.

இதுகுறித்து கரூா் மாவட்ட தவெக நிா்வாகிகள் கூறுகையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் 41 பேரில் 39 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை தவெக தலைவா் விஜய் சனிக்கிழமை அனுப்பியுள்ளாா். மீதம் உள்ள 2 பேரின் குடும்பங்களில் வாரிசு யாா் என்பது தொடா்பாக சட்டரீதியாக சில பிரச்னைகள் உள்ளன. அந்த பிரச்னை முடிந்தவுடன் அவா்களின் குடும்பத்தினருக்கும் பணம் அனுப்பிவைப்பாா் என்று தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com