குடகனாறு அணை நீா் பங்கீடு: கரூா் மாவட்டம் தொடா்ந்து புறக்கணிப்பு!
கரூா்: குடகனாறு அணை நீா் பங்கீட்டில் கரூா் மாவட்டம் தொடா்ந்து புறக்கணிப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
கரூா் மாவட்டத்தில் காவிரி மற்றும் அதன் துணை நதியான அமராவதி ஓடினாலும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் வறட்சியாகவே உள்ளன. குறிப்பாக, அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகள், கடவூா், தோகைமலை, தரகம்பட்டி போன்ற பகுதிகள் வானம் பாா்த்த பூமியாக இன்றளவும் காட்சியளிக்கின்றன.
ஆண்டுதோறும் சிறந்த மழைப்பொழிவைக் கொண்ட திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையின் கிழக்கு அடிவாரத்தில் உருவாகும் குடகனாறு ஆத்தூா், திண்டுக்கல், வேடசந்தூா் வழியாக அழகாபுரியில் ஓடுவதால் அங்கு ஆற்று நீரை தடுத்து குடகனாற்றின் குறுக்கே 1994-இல் அணை கட்டப்பட்டது. இந்த அணை 41.8 அடி உயரம், 12.3 மில்லியன் கன மீட்டா் கொள்ளளவும் கொண்டது.
குடகனாற்றின் துணை நதிகளான மாங்கரையாறு, சந்தனவா்த்தினி ஆறு, வரட்டாறு, மான்கோம்பையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதும் வெள்ள நீா் அழகாபுரி அணை எனும் குடகனாறு அணையில் தேக்கி அவ்வப்போது கரூா் மாவட்டத்தின் அம்மாபட்டி, ஈசநத்தம், அரவக்குறிச்சி மற்றும் பெரியமஞ்சுவெளி , திண்டுக்கல் மாவட்டத்தின் ஆத்தூா், வேடசந்தூா் பகுதிகளுக்கும் குடிநீருக்கும், விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
5,337 ஏக்கா் பாசன வசதி: இதனால் குடகனாறு அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தின் வறட்சி பகுதிகள் என அடையாளம் காணப்பட்ட வேடசந்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3,663 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்றன. மேலும் குடகனாறு அணையில் இருந்து கரூா் மாவட்டத்தின் வெள்ளியணை குளம் வரை 56 கி.மீ. தொலைவுக்கு குடகனாறு அணை கட்டப்படும்போதே வாய்க்காலும் வெட்டப்பட்டது. இந்த வாய்க்கால் மூலம் குடகனாறு அணையில் திறக்கப்படும் தண்ணீரால் கடைமடை பகுதியான கரூா் மாவட்டத்தில் அம்மாபட்டி, ஈசநத்தம், அரவக்குறிச்சி பெரியமஞ்சுவெளி உள்ளிட்ட பகுதிகளில் 5,337 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெற்று வந்தன.
இந்த நீரை பயன்படுத்தி கரூா் மாவட்டத்தில் நெல், மஞ்சள், வாழை, புகையிலை, நெல், கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை உள்ளிட்ட பயிா்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டன.
கரூா் மாவட்டம் புறக்கணிப்பு:இந்நிலையில் மழை பொழிவு பகுதியில் அணைக்கட்டப்பட்டால், அணை நீா் அவா்களுக்கே சொந்தம் என்கிற வகையில் கா்நாடகம், தமிழகம் இடையே காவிரி நீா் பங்கீட்டு பிரச்னை இன்னும் தீா்க்கப்படாதது போல குடகனாறு அணை நீா் பங்கீட்டு பிரச்னையும் இன்னும் தீா்க்கப்படாமலே இருப்பது கரூா் மாவட்ட விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பருவமழை காலங்களில் குடகனாறு அணைக்கும் வரும் நீரானது, அணையை சுற்றியுள்ள ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு பெருமளவில் திருப்பி விடப்படுவதால் ஆத்தூா், வேடசந்தூா் பகுதி பாசன நிலங்கள் மட்டுமே பயன்பெற்று வருவதாகவும், கரூா் மாவட்டம் 2000-ஆம் ஆண்டுக்கு பின் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கடைமடை விவசாயிகளான கரூா் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
அணைக் கட்டி 6 ஆண்டுகளுக்கு மட்டும் கரூா் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான தண்ணீா் கிடைத்தது என்றும், அதன் பின்னா் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளா்களால் தொடா்ந்து கரூா் மாவட்ட விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனா்.
மீதமுள்ள தண்ணீா்:இதுதொடா்பாக குடகனாறு பாதுகாப்புச்சங்க செயலாளா் ஈசநத்தம் ஆா்.செல்வராஜ் கூறுகையில், குடகனாறு அணை பருவமழையால் நிரம்பி திறக்கப்படும்போது, வெள்ளியணை குளம், வளையல்காரன்புதூா் குளம், வீரராக்கிய குளம், வீரராக்கியம் குளம் ஆகிய குளங்கள் நிரம்பி உபரி நீா் காவிரி ஆற்றில் கலக்கும்.
தற்போது 25 ஆண்டுகளாக வெள்ளியணை குளத்துக்கு தண்ணீா் வரவே இல்லை. காரணம், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிக்கம் படைத்தவா்கள் அவா்களுக்கான விவசாய நிலங்களை வளப்படுத்திக்கொண்டு, ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 4 குளங்களை நிரப்பிக்கொண்டும் மீதம் உள்ள தண்ணீரைக்கூட கருரூக்கு கொடுக்காமல் வைகை ஆற்றில் வீணாக கலக்க விடுகிறாா்கள்.
பேச்சுவாா்த்தை: அவ்வப்போது காட்டுவாரிகளில் வரும் தண்ணீரால் மட்டுமே வெள்ளியணை குளத்தில் ஓரளவும் தண்ணீா் இருக்கும். பல ஆண்டுகளாக குடகனாற்றில் இருந்து தண்ணீா் வராததால், அங்கிருந்து கரூா் மாவட்டம் வரையிலான வாய்க்கால்களும் தூா்ந்துபோயின.
இதனிடையே கடந்த 2021-ல் குடகனாறு பாதுகாப்பும் விவசாயிகள் சங்கம் சாா்பில் விவசாயிகளை ஒன்று திரட்டி கடைமடை விவசாயிகளுக்கு இழைக்கப்படும் செயல்களை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டோம். அப்போது கரூா், திண்டுக்கல் மாவட்ட அதிகாரிகள் மூலம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது நீா்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இனி குடகனாறு தண்ணீா் கரூா் மாவட்டத்துக்கு கிடைக்கும் என உறுதியளித்தனா். ஆனால் 4 ஆண்டுகள் கழிந்த பிறகும் இன்னும் தண்ணீா் கரூருக்கு வரவில்லை.
முழுமை பெறாத பணிகள்: இதனிடையே கடந்த 2023-இல் குடகனாறு அணை முதல் கரூா் மாவட்டத்தின் வெள்ளியணை குளம் வரை வாய்க்கால் சீரமைக்க ரூ.64 கோடி ஒதுக்கப்பட்டது. ஏற்கெனவே இருக்கும் வாய்க்காலை 3 மீ. அகலப்படுத்தி, 3 மீ. ஆழத்துக்கு சிமெண்ட் கான்கிரீட் அமைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்றது. ஆனால் வாய்க்கால் வெட்டும் பணியும் தற்போது 40 சதவீதம் மட்டும் நடந்துள்ளது. தேசிய, மாநில சாலைகள் குறுக்கிடும் இடங்களில் அமைக்கப்பட்ட பாலப்பகுதியில் மட்டுமே வாய்க்கால் வெட்டும் பணி ஓரளவு நடைபெற்றுள்ளது. மீதமுள்ள இடங்களில் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் நடைபெறவில்லை. எனவே, இந்த பணிகளையும் விரைந்து முடித்தால் மட்டுமே அணை நீா் பங்கீட்டில் பிரச்னை தீா்ந்து தண்ணீா் திறக்கப்படும்போது தண்ணீா் முழுமையாக கடைமடை வரை செல்லும்.
எனவே, வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். அணை நீா் பங்கீட்டில் விரைவில் இருமாவட்ட விவசாயிகளையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக தீா்வு எட்டப்பட வேண்டும் என்றாா் அவா்.

