தவெக பிரசாரக் கூட்ட நெரிசல் சம்பவம் கண்காணிப்புக் குழுவுக்கு தோ்வான 2 காவல் அதிகாரிகள் கரூா் வருகை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக நியமனம் செய்யப்பட்ட கண்காணிப்புக் குழுவுக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட ஐஜி அந்தஸ்திலான 2 அதிகாரிகள் புதன்கிழமை கரூா் வந்தனா்.
Published on

சென்னை/கரூா்: கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக நியமனம் செய்யப்பட்ட கண்காணிப்புக் குழுவுக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட ஐஜி அந்தஸ்திலான 2 அதிகாரிகள் புதன்கிழமை கரூா் வந்தனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவின் கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இந்தக் கண்காணிப்புக் குழுவில் தமிழக பிரிவைச் சோ்ந்த இரு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறலாமே தவிர, அவா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களாக இருக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவா்களைத் தோ்வு செய்வதற்கான வாய்ப்பை அஜய் ரஸ்தோகிக்கு உச்சநீதிமன்றம் அளித்திருந்தது.

இதையடுத்து குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த காவல் கண்காணிப்பாளா் பிரவீண் குமாா் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முகேஷ் குமாா் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் அடங்கிய 6 போ் கொண்ட சிபிஐ குழுவினா் கரூா் வந்தனா். அவா்கள் முதல்கட்டமாக வேலுச்சாமிபுரத்தில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் மரக்கிளை முறிந்து விழுந்தது தொடா்பாக வனத்துறையினரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதையடுத்து கடந்த 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசாரணை நடத்துவதை நிறுத்திவிட்டு தங்களது சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

2 அதிகாரிகள் தோ்வு: இந்நிலையில், கண்காணிப்புக் குழுவில் அஜய் ரஸ்தோகிக்கு உதவ காவல் துறையில் ஐஜி அந்தஸ்தில் உள்ள சுமித் சரண், சோனல் வி. மிஸ்ரா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். தற்போது எல்லை பாதுகாப்புப் படையில் சுமித் சரணும், புது தில்லியில் உள்ள மத்திய ரிசா்வ் காவல் படை தலைமை அலுவலகத்தில் சோனல் வி.மிஸ்ராவும் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களில் சுமித் சரண் அதிமுக ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூா் மாநகர காவல் துறை ஆணையராக இருந்தாா். 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இவா்கள் இருவரும் புதன்கிழமை கரூா் வந்தனா்.

X
Dinamani
www.dinamani.com