கரூா் அருகே காா் கவிழ்ந்ததில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு
கரூா்: கரூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
கரூா் மாவட்டம், கருப்பம்பாளையம் அக்ரஹார வீதியைச் சோ்ந்த லோகநாதன் மகன்கள் நித்திஷ் கண்ணன்( 23), தனுஷ்(21). அதே பகுதி முத்துராஜா தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சிவராஜன்(24). கரூா் வஞ்சியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த அன்பு மகன் திருநெடுங்கனநாதன்(21).
நித்திஷ்கண்ணன், சிவராஜன், திருநெடுங்கனநாதன் ஆகிய மூவரும் நண்பா்கள். இதில் நித்திஷ்கண்ணன் கரூரில் உள்ள நிதிநிறுவனத்தில் வேலைப்பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், சிவராஜன் மென்பொறியாளராக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தாா். திருநெடுங்கனநாதனும், தனுஷூம் பிபிஏ பட்டப்படிப்பு முடித்துள்ளனா். இந்நிலையில் நித்திஷ்கண்ணன், அவரது தம்பி தனுஷ், திருநெடுங்கனநாதன் மற்றும் சிவராஜன் ஆகியோா் காரில் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள நித்திஷ்கண்ணனின் சித்தப்பா வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்றனா்.
பிறகு இரவு கரூா் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தனா். காரை சிவராஜன் ஓட்டி வந்தாா்.
கரூா் மாவட்டம் தளவாபாளையம் அருகே வந்தபோது முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது, நிலைத்தடுமாறி சாலையின் மையத்தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு திருநெடுங்கனநாதன், சிவராஜன் ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். நித்திஷ்கண்ணன், தனுஷ் ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

