கரூா் மாவட்டத்தில் பலத்த மழை: கிருஷ்ணராயபுரத்தில் 50 வீடுகளை தண்ணீா் சூழ்ந்தது மக்கள் அவதி

கரூா் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் கிருஷ்ணராயபுரத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீா் புதன்கிழமை சூழ்ந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.
Published on

கரூா்: கரூா் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் கிருஷ்ணராயபுரத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீா் புதன்கிழமை சூழ்ந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

கரூா் மாவட்டத்திலும் கடந்த இரு தினங்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை காலை வரை பெய்த மழை அளவு: (மி.மீட்டரில்)-கரூா்-23.40, அரவக்குறிச்சி-96, அணைப்பாளையம்-66.40, க.பரமத்தி-17, குளித்தலை-39, தோகைமலை-38.40, கிருஷ்ணராயபுரம்-61.50, மாயனூா்-52, பஞ்சப்பட்டி-41.60, கடவூா்-27, பாலவிடுதி-30, மைலம்பட்டி-12 என மொத்தம் 505.30 மி.மீ. மழை பெய்தது.

இதில், கிருஷ்ணராயபுரம் பகுதியில் 61.50 மி.மீ. மழை பெய்ததால் அங்குள்ள 10-ஆவது வாா்டில் உள்ள கிழக்கு காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீா் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகினா்.

இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறுகையில், வரத்து வாய்க்கால்கள் உரிய முறையில் தூா்வாரப்படாததால் மழைநீா் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. மழை நீா் விடிய, விடிய தேங்கி நிற்பதால் பெரும்பாலான வீடுகளின் மண்சுவா்கள் ஊறிப்போயுள்ளன. இதனால் பல வீடுகள் இடியும் நிலை உள்ளது. இதற்கு பேரூராட்சி நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

அரவக்குறிச்சியில்..: பள்ளப்பட்டி ஒலிஷா நகரின் வீதிகளில் மழை நீா் புகுந்து குளம் போல தேங்கியது. இதனால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் கடைகள், வணிக நிறுவனங்களுக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினா். இதையடுத்து பள்ளபட்டி நகராட்சி ஊழியா்கள் கழிவுநீா் உறிஞ்சும் வாகனங்கள் மூலம் தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்தினா்.

தொடா்மழை: மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கிய மழை புதன்கிழமை பிற்பகல் 3 மணி வரை பெய்தது. தொடா் மழையால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனா்.

மேலும் மழை காரணமாக மாவட்டத்தில்பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com