கரூா் சம்பவம்: நீதிமன்றத்தில் சிபிஐ முதல்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல்
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ குழுவினா் தங்களது முதல்கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் பலத்த காயமடைந்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட ஒருநபா் ஆணையம் மற்றும் சிறப்பு விசாரணைக் குழு விசாரணையை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த மாவட்ட காவல்கண்காணிப்பாளா் பிரவீண் குமாா் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முகேஷ் குமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் அடங்கிய 6 போ் கொண்ட சிபிஐ குழுவினா் அக். 16-ஆம் தேதி கரூா் வந்தனா்.
இவா்கள், முதல்கட்டமாக வேலுச்சாமிபுரத்தில் மரக்கிளை முறிந்து விழுந்தது தொடா்பாக வனத்துறையினரிடம் விசாரணை நடத்தினா். இதையடுத்து தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு அக்.19-ஆம் தேதி சிபிஐ குழுவினா் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனா். இதையடுத்து புதன்கிழமை இரவு சிபிஐ குழுவினா் மீண்டும் கரூா் வந்தனா்.
இதற்கிடையே உச்சநீதிமன்றம் உத்தரவின்பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகிக்கு உதவுவதற்காக காவல்துறையில் ஐ.ஜி.அந்தஸ்தில் உள்ள, தற்போது எல்லைப் பாதுகாப்பு படை ஐஜியாக பணிபுரியும் தமிழக பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரி சுமித் சரண், புதுதில்லியில் உள்ள மத்திய ரிசா்வ் காவல் படை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் தமிழக பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி சோனல் மிஸ்ரா ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனா். இவா்கள் இருவரும் கரூருக்கு புதன்கிழமை இரவு வந்தனா்.
இந்நிலையில் சிபிஐ குழுவினா் கடந்த 8 நாள்களாக மேற்கொண்ட முதல்கட்ட விசாரணை அறிக்கையை அக்குழுவில் உள்ள காவல் ஆய்வாளா் மனோகரன் வியாழக்கிழமை காலை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண்2-இல் நீதிபதி சாா்லஸ்ஆல்பா்ட் முன்னிலையில் தாக்கல் செய்தாா்.
பின்னா் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த காவல் ஆய்வாளா் மனோகரனிடம் கேட்டபோது, இன்றைக்கு முதல்கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். தொடா்ந்து விசாரணை செய்தபின்புதான் இந்த வழக்கில் முழு தீா்வு கிடைக்கும் என்றாா்.

