
நீதிமன்ற உத்தரவின்படி அமராவதி அணையில் தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்: திமுக, அதிமுகவினரும் பங்கேற்பு; 150 போ் கைது
நீதிமன்ற உத்தரவின்படி அமராவதி அணையிலிருந்து தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகளுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த ஒத்தமாந்துறையில் பொள்ளாச்சி சாலையில் விவசாயிகளுடன் அமா்ந்து மறியல் போராட்டத்தில் பங்கேற்ற திமுகவினா்.
நீதிமன்ற உத்தரவின்படி அமராவதி அணையிலிருந்து தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகளுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அமராவதி அணையிலிருந்து ஆக.30-ஆம்தேதி முதல் செப்.7-ஆம்தேதி வரை விநாடிக்கு 1000 கன அடி நீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கரூா் மாவட்ட நிலத்தடி நீா் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் அமராவதி அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீா் திறந்தால் மட்டுமே கடைமடை பகுதிக்கு தண்ணீா் செல்லும் என்பதால் ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடிநீா் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அதன்படி மதுரை உயா்நீதிமன்றம் அண்மையில் அமராவதி அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீரை இரு நாள்களுக்கும், பின்னா் படிப்படியாக குறைத்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆக.30-ஆம்தேதி அணையில் இருந்து அரசின் உத்தரவின்படி 1,000 கன அடி நீா் மட்டுமே திறக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நீதிமன்ற உத்தரவின்படி தண்ணீரை திறக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா். ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி செவ்வாய்க்கிழமையும் தண்ணீா் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திமுக நெசவாளா் அணிச் செயலா் பரணி கே.மணி மற்றும் அதிமுக மாவட்டச் செயலா் கமலக்கண்ணன் ஆகியோா் தலைமையில் ஏராளமான திமுகவினா் மற்றும் அதிமுகவினா் நீதிமன்ற உத்தரவின்படி தண்ணீா் திறக்கக்கோரி செவ்வாய்க்கிழமை காலை கரூா்-திருப்பூா் மாவட்ட எல்லையான ஒத்தமாந்துறையில் பொள்ளாச்சி சாலையில் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சின்னதாராபுரம் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து அவா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 67 பெண்கள் உள்பட 150 பேரை கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





