பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் புதன்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
முகாமை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தொடக்கி வைத்தார். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 80 மாணவ, மாணவிகள் ரத்த தானம் அளித்தனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இதில், இந்திய மருத்துவ சங்கச் செயலர் ராஜா, பொருளாளர் ஹீசைன், இளையோர் செஞ்சிலுவை சங்கத் தலைவர் வரதராஜன், செயலர் என். ஜெயராமன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூரில்...
அரியலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்திய மருத்துவச் சங்கக் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமுக்கு செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவர் அ. நல்லப்பன் தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் முகாமை தொடக்கி வைத்து ரத்த தானம் வழங்கினார். இதில் அரியலூர் அரசுக் கலைக்கல்லூரி, தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரி, ஜயங்கொண்டம் நேஷனல் கல்லூரி உள்ளிட்டோர் சார்பாக 105 பேர் ரத்ததானம் வழங்கினர்.