பெரம்பலூரில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு அண்டும் ஜூன் 26-ம் தேதி உலக போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதையொட்டி, உலகம் முழுவதிலும் போதை பொருள்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பெரம்பலூர் பாலைக்கரை பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப்பொருள்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை கொடியசைத்து தொடக்கி வைத்தார். பெரம்பலூர் மெளலான மற்றும் அரசினர் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதைப்பொருள்கள் பயன்பாட்டுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி சென்றனர்.
பாலக்கரையில் தொடங்கிய பேரணி சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, கலால் உதவி ஆணையர் (பொ) பன்னீர்செல்வம், முதன்மை கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம், கூடுதல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) சந்திரசேகரன், துணை கண்காணிப்பாளர் சுருளியாண்டி, கோட்ட கலால் அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.