பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஊராட்சி காந்தி நகரில் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
மையத்தை திறந்துவைத்து, பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்செல்வன் பேசியது:
சட்டப்பேரவை உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லுதல், தமிழ்பாட்டு, தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள், எண் கணிதம் ஆகியவை அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் கற்பிக்கப்பட உள்ளது.
7 முதல் 24 மாத குழந்தைகள் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக சத்துமாவு வழங்கப்படும்.
இதன்மூலம் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் சரியான அளவு சத்துணவு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. குழந்தைகளின் சரிவிகித உணவு மேம்பாடு அடையும் வகையில் அங்கன்வாடி மையங்களில் கலவை சாதம் வழங்கப்
படும்.
மேலும், குழந்தை பெற்ற தாய்மார்கள் மற்றும் கர்ப்பினி பெண்களுக்கு சரியான அளவில் சரிவிகித உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 160 கிராம் அளவு கொண்ட சத்து உருண்டைகள் அவரவர் வீடுகளுக்கே சென்று ஒவ்வொரு நாளும் வழங்கப்படுவதோடு, பிறந்த குழந்தையின் எடை கணக்கிடப்பட்டு அவர்களின் வளர்ச்சிக்கேற்ப 2 வயது வரை குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்படுகிறது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், எளம்பலூர் ஊராட்சி தலைவர் ஆர்.சி. ராமசாமி, அங்கன்வாடி மேற்பார்வையாளர் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.