சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

  கேரள மாநிலம், கண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகரன் மகன் அசின்சேகர் (20), அதே பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் கோபால் பிரனேத்ராஜா (20). இருவரும் பெரம்பலூரில் தங்கி தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனர்.

  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறநகர்ப் பேருந்து நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வெங்கடேசபுரம் அருகே சென்றபோது சாலைத் தடுப்பு சுவற்றில் மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்தனர். அப்பகுதி பொதுமக்கள் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் அசின்சேகர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். புகாரின்பேரில் பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

  சுமை ஆட்டோ மீது லாரி மோதி முதியவர் சாவு: திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வேங்கடத்தனூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமை ஆட்டோவில் 20-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர்.

  ஆட்டோவை வேங்கடத்தனூரை சேர்ந்த கோவிந்தன் மகன் பரமசிவம் (29) ஓட்டினார். பெரம்பலூர் - துறையூர் சாலையில் நக்கசேலம் அருகே உள்ள மட்டப்பாறை அருகே ஆட்டோ வந்தபோது, திண்டிவனத்திலிருந்து பழனிக்கு தர்ப்பூசணி ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயு தெற்கு சிறுமத்தூர் கிராமத்தை சேர்ந்த ரா. பெருமாள் (60) உயிரிழந்தார்.

  ஆட்டோவில் பயணம் செய்த துறையூர் வெங்கடாஜலபுரத்தை சேர்ந்த ராமன் மகன் துரைசாமி, பெரியசாமி மனைவி பிச்சையம்மாள், துரைசாமி மகள் புவனேஷ்வரி (15), சுப்ரமணியன் மனைவி கவிதா (30) ஆகியோர் காயமடைந்தனர். புகாரின்பேரில் பாடாலூர் காவல் நிலைய ஆய்வாளர் ரவி சக்கரவர்த்தி வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் இடையாப்பட்டியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் ஆனந்தனை (26) கைது செய்து விசாரிக்கிறார்.

  லாரி மோதி முதியவர் சாவு: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பொ. மருதமுத்து (70). இவர் குன்னம் அண்ணாநகர் அருகே திங்கள்கிழமை பிற்பகல் நடந்து சென்றபோது, அரியலூரிலிருந்து மைசூருக்கு சிமெண்ட் மூட்டை ஏற்றிச்சென்ற லாரி மோதி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சந்திரா (50) அளித்த புகாரின்பேரில், குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராஜ் வழக்குப் பதிந்து கர்நாடக மாநிலம், கொல்லேகால் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் சண்முகம் மகன் மணியை (60) கைது செய்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai