சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில், காரில் எடுத்துச்சென்ற ரூ. 7.19 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்து கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.

  ஏப். 24ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை வட்டாட்சியர் கஜேந்திரன் தலைமையில், நிலைக்குழு வட்டாட்சியர் முருகன், உதவி ஆய்வாளர் தனபால், காவலர்கள் பாலமுருகன், சுசீலா, மெர்சி ஆகியோரை கொண்ட பறக்கும் படை குழுவினர் சனிக்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாண்டிச்சேரியிலிருந்து பழனி நோக்கி சென்ற காரை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டதில், பாண்டிச்சேரி 5வது வரதன் தெருவை சேர்ந்த அய்யாசாமி மகன் முருகன் (58) உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 2 லட்சம் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.

  அதைத்தொடர்ந்து, அதே வழியில் சென்ற மற்றொரு காரை பறக்கும் படையினர் சோதனையிட்டனர். காரில் பயணம் செய்த கடலூர் மாவட்டம், பெரியகாட்டுபாளையம் 7-வது குறுக்குத் தெருவை சேர்ந்த ஜெய்சங்கர் மனைவி சுமதி (28)  உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற ரூ. 2.50 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

  இதேபோல், பறக்கும் படை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான பறக்கும் படையினர் பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள செஞ்சேரி கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே பெரம்பலூர் நோக்கி வந்த திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் மதுபாலனின் (45) காரை வழிமறித்து சோதனை செய்தனர். காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற ரூ. 2 லட்சத்து 69 ஆயிரத்து 840 பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

  பெரம்பலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 7 லட்சத்து 19 ஆயிரத்து 840ஐ பறக்கும் படை அதிகாரிகள், பெரம்பலூர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai