சுடச்சுட

  

  "டிவி விளம்பர பிரசாரத்துக்கு சான்று பெற வேண்டும்'

  By  பெரம்பலூர்,  |   Published on : 11th March 2014 02:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கேபிள் கட்டமைப்பு அல்லது தொலைக்காட்சி அலைவரிசையில் வெளியிடும் விளம்பரங்களுக்கு சான்று பெற வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை.
   பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கேபிள் கட்டமைப்பு அல்லது தொலைக்காட்சி அலைவரிசையில் வெளியிடும் விளம்பரங்களுக்கு சான்றிதழ் பெறுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்குத் தலைமை வகித்த அவர் மேலும் கூறியது:
   தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கேபிள் கட்டமைப்பு அல்லது தொலைக்காட்சி அலைவரிசையில் வெளியிடக் கருதியுள்ள விளம்பரங்களுக்கு கண்டிப்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
   அவ்வாறு வெளியிடக் கருதியுள்ள விளம்பரங்கள் ஒளிபரப்பாக உள்ள 7 நாள்களுக்கு முன், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரால் உரிய முறையில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு, அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும்
   மேலும், சான்றளிக்கப்பட்ட உரிய எழுத்துப் படிவத்துடன் விளம்பரத்தின் 2 நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் விளம்பரத்தின் தயாரிப்புச் செலவு, விளம்பரங்களின் இடையில் சேர்க்கப்படும் செலவுத்தொகை, அரசியல் கட்சிகளைச் சாராத நபரால் வெளியிடப்படும் விளம்பரங்களைப் பொறுத்து, வேட்பாளர்களின் பயன்களுக்காக வெளியிடப்படவில்லை என்ற உறுதிமொழி பெற வேண்டும். மேலும், விளம்பரத்திற்குண்டான கட்டணத் தொகையை காசோலையாக பெற வேண்டும். இதை, அனைத்து தொலைக்காட்சி சேனல் உரிமையாளர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றார் அவர்.
   கூட்டத்தில் பெரம்பலூர் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, விளம்பர கண்காணிப்புக் குழுச் செயலர் சாலி தளபதி, கேபிள் டி.வி வட்டாட்சியர் முத்தையன் உள்பட தனியார் தொலைக்காட்சி அலைவரிசை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai