சுடச்சுட

  

  "அதிமுக வேட்பாளரை வெற்றிபெற செய்வது மக்களின் கடமை'

  By பெரம்பலூர்  |   Published on : 20th March 2014 10:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதைராஜை வெற்றிபெறச் செய்வது மக்களின் கடமை என்றார் நடிகை சி.ஆர். சரஸ்வதி.

  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அண்மையில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் மேலும் பேசியது:

  குழந்தை பிறந்தது முதல் அந்தக் குழந்தைக்கு ஊட்டச்சத்து, இலவச கல்வி, சீருடை, காலணிகள், நோட்டுப்புத்தகம், ஜாமன்ட்ரி பாக்ஸ் வழங்குவதோடு, மேல்நிலைக் கல்விக்கு தேவையான மடிக்கணினி, கல்வி உதவித்தொகை, பள்ளிக்கு வந்து செல்ல இலவச சைக்கிள், இலவச பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் வழங்குகிறார்.

  கல்லூரி வரை இலவசக் கல்வி அளிப்பதோடு, ஏழை பெண்களின் திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம், பேறுகாலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதோடு மட்டுமின்றி வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, கிரைண்டர், மிக்ஸி, மின் விசிறி என எண்ணிலடங்கா இலவசத் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

  இதுபோன்ற திட்டங்கள் இந்தியா முழுவதும் செயல்படுத்த, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நாட்டின் பிரதமராக்க வேண்டும். எனவே, அவரது கரத்தை வலுப்படுத்த அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதைராஜை வெற்றிபெறச் செய்ய வேண்டியது மாவட்ட மக்களின் கடமை என்றார் அவர்.

  உடும்பியம் கிராமத்தில் தொடங்கிய பிரசாரத்திற்கு, தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியத் தலைவரும், பெரம்பலூர் மாவட்டச் செயலருமான மா. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பூனாட்சி பிரசாரத்தை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில், வேப்பந்தட்டை ஒன்றியச் செயலர் ப. கண்ணுசாமி, பெரம்பலூர் நகரச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன், வேப்பந்தட்டை ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai