சுடச்சுட

  

  ரயில் பாதை, மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை

  By பெரம்பலூர்,  |   Published on : 25th March 2014 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்டத்தில் ரயில் பாதை, மருத்துவக் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்டவை அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஐ.ஜே.கே கட்சியின் நிறுவனர் தலைவரும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான டி.ஆர். பச்சமுத்து.

  பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரம்பலூர் மக்களவை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ஐஜேகே கட்சியின் மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:

  இந்தியாவில் நல்லாட்சி மலர்ந்திட வழியில்லையே எனத் தவித்தபோது மோடி கிடைத்துள்ளார். மோடி நாட்டுக்கான தலைவராக உருவாக்கப்பட்டவரல்ல. தானாகவே உருவான தலைவர். இப்பகுதி மக்களுக்காக, ஐஜேகே சார்பில் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளையும், மருத்துவ உதவிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.  பெண்களுக்கு 50 சத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென குரல்கொடுக்கும் இயக்கமாக ஐஜேகே விளங்கி வருகிறது. என்னைத் தேர்ந்தெடுத்தால், இத்தொகுதி மக்களின் தேவை அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன். பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரியலூரிலிருந்து, பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு செல்லும் வகையில் புதிய ரயில்பாதை அமைத்துத் தருவேன்.

  பெரம்பலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க ஏற்பாடு செய்வேன். அரசு மகளிர் கலைக் கல்லூரியை பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார் அவர்.

  மாநில தலைவர் கோவைத் தம்பி, மாநில பொதுச் செயலர் ஜெயசீலன், பொருளாளர் ராஜன், மாநில அமைப்பு செயலர்கள் காமராஜ், வெங்கடேசன், மாநில வழக்குரைஞரணி செயலர் பி. அன்புதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எம். சிவசுப்ரமணியன், மாவட்டத் தலைவர் சி. சந்திரசேகர், தேமுதிக மாவட்டச் செயலர் துரை. காமராஜ், ஒன்றியச் செயலர் வாசு. ரவி, பாமக மாவட்டச் செயலர் செந்தில், மதிமுக மாவட்டச் செயலர் செ. துரைராஜ் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai