சுடச்சுட

  

  சிறந்த மாணவர்களை உருவாக்குவதே ஆசிரியர்களின் கடமையாகும் என்றார் பாரதிதாசன் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி மையத்தின் இயக்குநரும், கல்வியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவருமான மு. ஆனந்தன்.

  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்வியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கை தொடக்கி வைத்த அவர் மேலும் பேசியது:

  முற்காலத்தில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. கற்றுக் கொடுப்பது மட்டுமன்றி, மாணவர்களை ஒழுக்கமிக்கவர்களாக உருவாக்குவது ஆசிரியரே. நல்ல மாணவர்களை உருவாக்குவது சிறந்த ஆசிரியரின் கடமையாகும். ஆசிரியர் என்பவர் இன்றைய உலகில் அதிகம் தேவைப்படுவதில்லை. பாடங்களை நடத்த நவீன உலகில் உபகரணங்களின் பங்கு அதிகமாகி விட்டது. எனவே, ஆசிரியர் இல்லாமல் கற்பித்தல் என்பது எளிமையாகி விட்டது என்றார் அவர். 

  தொடர்ந்து, பெங்களூரு பி.இ.எஸ். கல்வியியல் கல்லூரி இணைப் பேராசிரியர் முனைவர் எம்.ஆர். லட்சுமி நாராணயணன் பேசியது:

  சிறந்த கற்றலுக்கு தொழில்நுட்ப உதவி மட்டும் போதாது, அதைக் கையாளும் நுட்பம் தெரிந்த ஆசிரியர்களே கற்பித்தலில் சிறந்த ஆசிரியர்கள். தொழில் நுட்பம் அறிந்த ஆசிரியர் ஒருவரால் மட்டுமே தகுந்த கற்றல் சூழ்நிலையை திறம்பட நிர்வகித்து, மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்த முடியும் என்றார் அவர்.

  கருத்தரங்கில், காரைக்கால் பெருந்தலைவர் காமராசர், அண்ணாமலை பல்கலைக் கழகம், ராசிபுரம் கஸ்தூரிபாய் காந்தி, புனே ஸ்பைசர் மெமோரியல், தொட்டியம் கொங்குநாடு, திருச்சி இந்திரா கணேசன், ஜே.ஜே, பாரதிதாசன் பல்கரைக் கழகம், ஆக்ஸ்போர்டு, சேலம் மாருதி, உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா, தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம், ஒரத்தநாடு ஆகிய கல்வியியல் கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்தனர்.

  தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் பி. நீலராஜ் முன்னிலை வகித்தார். 

  தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் எம். ராஜலட்சுமி வரவேற்றார். தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆர். மைதிலி நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai