கோரையாறு அருவி சுற்றுலா தலமாக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டத்தில், இயற்கை எழில் சூழ்ந்த பச்சமலை அடிவாரத்தில் உள்ள "எட்டெருமை பாலி' என்றழைக்கப்படும்

பெரம்பலூர் மாவட்டத்தில், இயற்கை எழில் சூழ்ந்த பச்சமலை அடிவாரத்தில் உள்ள "எட்டெருமை பாலி' என்றழைக்கப்படும் கோரையாறு அருவியை தமிழக சுற்றுலா தலங்களின் பட்டியலில் இடம்பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள கோரையாறு கிராமத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் பச்சைமலை மீது ஏறிச்சென்றால் கோரையாறு நீர்வீழ்ச்சி வரும். இந்த நீர் வீழ்ச்சியில் மலை உச்சியிலிருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் 60 அடி ஆழம் கொண்ட நீர் தேக்கம் உள்ளது.

இந்த அருவியில், ஆண்டுதோறும் மழை காலம் மற்றும் அக்டோபர் முதல் ஜனவரி வரையுள்ள குளிர் காலங்களிலும் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமிருக்கும்.

இந்த அருவிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வருடி வரும் குளிர்ச்சியான தென்றல் காற்று, அவ்வப்போது உலா வரும் மேகக் கூட்டங்கள் ஆகியவையே சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு காரணம். கடந்த சில நாள்களாக மலைக் கிராமப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்த அருவியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இயற்கையின் கொடையாக விளங்கும் இந்த அருவிக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், நடந்து சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. கோரையாறு கிராமத்திலிருந்து மலை மீது 3 கி.மீ. தூரம் நடந்து செல்லும் பாதை கரடு முரடாக உள்ளதால், சுற்றுலா பயணிகள் பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது.

இவற்றை பொருட்படுத்தாமல் சேலம், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

அருவியில் குளிக்கும் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக உடை மாற்றும் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டால், இன்னும் வெளிச்சத்துக்கு வராமல், பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமையான பகுதிகளில் உள்ள இந்த அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே, காரையாறு அருவிக்கு செல்லும் மலைப் பாதையை சீரமைக்கவும், சுற்றுலா தலமாக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பெரம்பலூர் மாவட்ட மக்களின் கோரிக்கையாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com