Enable Javscript for better performance
சிறுவாச்சூரில் பெரியசாமி கோயில் குடமுழுக்கு: களிமண் சிற்பங்கள் தயாரிப்புப் பணிகள் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    சிறுவாச்சூரில் பெரியசாமி கோயில் குடமுழுக்கு: களிமண் சிற்பங்கள் தயாரிப்புப் பணிகள் தீவிரம்

    By பெரம்பலூர்,  |   Published on : 17th April 2015 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள சிறுவாச்சூர் பெரியசாமி கோயில், செல்லியம்மன் கோயில் குடமுழுக்குக்காக சுடு களி மண்ணாலான சிற்பங்கள் தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன் கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலின் உப கோயிலாக விளங்கும் மலை மீது அமைந்துள்ள பெரியசாமி, செல்லியம்மன் கோயில் குடமுழுக்கு வருகிற ஏப். 22ம் தேதி நடைபெற உள்ளது.

    சிறுவாச்சூர் கிராமத்தின் பூர்வீக குடிமக்களால் பெரியசாமி கோயில் குடமுழுக்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற உள்ளது. இந்து சமய

    அறநிலையத்துறையின் நிதியுதவியுடன் பழைய சிலைகளுக்கு பதிலாக, புதிய சிலைகள் வடிவமைத்து குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகக் குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி, பாண்டிச்சேரி மாநிலம், வில்லியனூரைச் சேர்ந்த ஸ்தபதி கிருஷ்ண முனுசாமி தலைமையில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் அருகே கடந்த 7 மாதங்களாக சிற்பம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்காக பல்வேறு வகையான மண் கொண்டு வரப்பட்டு களி மண்ணுடன் சில மூலப்பொருள்களை சேர்த்து சிலை வடிக்கின்றனர். சுமார் 1,200 டிகிரி வெப்ப நிலையில் சிலைகள் சுடப்பட்டு 52 மணி நேரம் சூளையில் வைத்த பிறகு வண்ணம் தீட்டப்படுகிறது.

    13.5 அடி உயரமுள்ள பட்டத்துக் குதிரை, 17.5 அடி உயரமுள்ள பொன்னுசாமி சிலை, 16.5 அடி உயரமுள்ள பெரியசாமி சிலைகளும், கிணத்தடியார், செல்லியம்மன், சப்த கன்னியர், குதிரைகள், வீரர்கள் என பல்வேறு வகையிலான சிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இயற்கை சீற்றங்களால் சிலைகள் பாதிக்கப்படாத வகையில் உருவாக்கப்படும் இந்த சிலைகள் 1,000 டிகிரி வெப்பத்தையும் தாங்கக் கூடியதாம். இடி, மின்னல் தாக்கினாலும் சிலைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல, சிலைகள் மீது தீட்டப்படும் வண்ணங்களும் 10 ஆண்டுகளுக்கு நீடித்து நிலைக்கும் என்றனர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர்.

    பெரியசாமி மலைக் கோயிலுக்கு பெண்கள் செல்ல அனுமதி இல்லை என்பதால், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் களி மண்ணால் உருவாக்கப்பட்டு வரும் பிரமாண்ட சிலைகளை பார்வையிட்டு வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai