Enable Javscript for better performance
பெரம்பலூரில் 255 பேருக்கு ரூ. 1.61 கோடி நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில் 255 பேருக்கு ரூ. 1.61 கோடி நலத் திட்ட உதவிகள்

    By பெரம்பலூர்  |   Published on : 27th January 2015 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 255 பயனாளிகளுக்கு ரூ. 1.61 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா முன்னிலையில், தேசிய கொடியை ஏற்றிவைத்த மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, 25 சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கெüரவித்தார்.

    பிறகு, சிறப்பாக பணிபுரிந்த 12 காவலர்களுக்கு தமிழக முதல்வரின் பதக்கங்கள், 13 காவலர்கள் மற்றும் 11 ஊர்க்காவல் படைவீரர்களுக்கு சான்றிதழ்கள், 254 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

    தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த, தற்போது திருச்சி மாவட்ட நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றிவரும் இரா. ரேவதி, மாவட்ட வருவாய் அலுவலர் (ஓய்வு) எம். தேவதாஸ், லால்குடி சர்க்கரை ஆலை துணை ஆட்சியர் பி.வி. சரவணன் உள்ளிட்ட 10 பேருக்கு மத்திய அரசின் வெள்ளிப்பதக்கங்களும், 5 பேருக்கு தாமிரப்பதக்கங்களும், பல்வேறு துறைகள் சார்பில் 255 பேருக்கு ரூ. 1,61,74,699 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் தரேஸ் அஹமது வழங்கினார்.

    விழாவையொட்டி, பெரம்பலூர் அரசு இசைப்பள்ளி, ஆலம்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, வேப்பூர் பாரதிதாசன் மாதிரி உறுப்பு மகளிர் கல்லூரி, செஞ்சேரி வித்யாஸரம் உண்டு உறைவிடப் பள்ளி, சாரதா மகளிர் கலை, அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர் சீனிவாசன் இருபாலர் கலை, அறிவியல் கல்லூரி, வேப்பந்தட்டை அரசு கலை, அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 917 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் செ. ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ. சகுந்தலா, ஊராட்சி குழுத் தலைவர்கள் ரா. வெண்ணிலா, க. ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai