சுடச்சுட

  

  பருத்தி பயிரில் சட்டிக் கலப்பை மூலம் உழவு செய்வது அவசியம் என்றார் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ப. விஜயலட்சுமி.

  இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  பெரம்பலுர் மாவட்டத்தில் ஆடிப் பட்டத்தில் மானாவரி பயிராக அதிக அளவில் பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பெய்த கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பருத்தி பயிருக்கு கரிசல் மண் பகுதிகளில் சட்டிக் கலப்பை அல்லது உளிக் கலப்பையை கொண்டு முதலில் கோடை உழவு செய்ய வேண்டும்.

  அவ்வாறு செய்யும் போது, மண்ணானது ஒன்று முதல் ஒன்றரை அடி ஆழம் உழவு செய்யப்பட்டு, மண்ணின் கடின தன்மை குறைந்து பொலபொலவென மாறும்.

  பிறகு கொக்கி கலப்பை கொண்டு குறுக்கு நெடுக்காக உழவு செய்து ஆடிப் பட்டத்தில் மழை பெய்தவுடன் தரமான பருத்தி விதைகளை தகுந்த இடைவெளியில் நடவுசெய்ய வேண்டும். இவ்வாறு உழவு செய்து பருத்தி விதைகளை நடவு செய்யும் போது, ஆழமான வேர் வளர்ச்சியுடைய பருத்தி செடிகளின் வேர்கள் நன்றாக வளர்ந்து செடிகள் செழுமையாக இருக்கும்.

  அதோடு மட்டுமின்றி மண்ணின் நீர்பிடிப்பு திறன் அதிகரித்து, பருத்தி செடிகள் வறட்சியை தாங்கி வளரவும் துணை புரிகின்றன. மேலும், மண்ணில் உள்ள தீங்குயிரி பூச்சியினங்களின் முட்டைகள், இளம் பருவ நிலைகள் அனைத்தும் சூரிய ஒளியில் பட்டு செயலிழப்பதால் பூச்சி தாக்குதலும் குறைகிறது.

  எனவே, எதிர்வரும் பருவத்தில் மானவாரியாக பருத்தி பயிரிடும் விவசாயிகள் முதலில் சட்டிக் கலப்பை கொண்டு கோடை உழவு செய்து பிறகு, கொக்கி கலப்பை மூலம் உழுது பிறகு பயரிட்டு அதிக மகசூல் பெறலாம். மேலும், விவரங்களுக்கு 89390 03569, 99442 44582 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai