Enable Javscript for better performance
பெரம்பலூரில் விளம்பரமில்லா விழிப்புணர்வு நிகழ்ச்சி!: பயன் என்ன? கேள்வியெழுப்பும் பொதுமக்கள்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில் விளம்பரமில்லா விழிப்புணர்வு நிகழ்ச்சி!: பயன் என்ன? கேள்வியெழுப்பும் பொதுமக்கள்

    By DIN  |   Published on : 08th October 2016 02:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னறிவிப்பும் இல்லை; உரிய விளம்பரமும் செய்யாமல் நடத்தப்படும் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் யாருக்கு என்ன பயன்? என்று பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
    வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதாரம், வருவாய், மீட்புப்பணித் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் சார்பில் மழைக்காலத்தில் ஆறுகளின் கரையோரங்களில் வசிப்போர், குளிக்கச் செல்வோர் திடீரென வரும் வெள்ளத்தில் சிக்காமல் தடுப்பது குறித்தும், சிக்கியவர்களைக் காப்பாற்றும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்புச் செயல் விளக்கங்களை ஆண்டுதோறும் செய்துகாட்டி வருகின்றனர்.
    இதன்படி, பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சியில் ரப்பர் படகு, லைப் ஜாக்கெட், கயிறு போன்றவற்றைக் கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் மூலம் செய்துகாட்டினர். இதுபோன்ற விழிப்புணர்வு செயல் விளக்கம் நடைபெறும்போது பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முன்கூட்டியே அறிவித்தால்தான், அவற்றை சம்பந்தப்பட்ட நபர்கள் பார்வையிட்டு பயன்பெறுவார்கள்.
    ஆனால், ஆட்சியரக வளாகத்தில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பாக அரசு அலுவலர்களுக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித முன்அறிவிப்பும் செய்யப்படவில்லையாம். இதனால், இந்நிகழ்ச்சியை அலுவலக பணியை முடித்துவிட்டு வெளியே சென்ற சுமார் 20-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மட்டுமே பார்வையிட்டனர். இதனால், சிறிது நேரத்திலேயே விழிப்புணர்வு நிகழ்ச்சியை தீயணைப்பு வீரர்கள் முடித்துக்கொண்டனர்.
    இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, எவ்வித முன்னறிவிப்பும் செய்யவில்லை. இதனால், பெரும்பாலான அலுவலர்கள் இந்த விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை. இனிவரும் காலங்களில், இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனைவரும் காணும் வகையில் முன்னறிவிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
    இதுபோன்ற நிகழ்ச்சிகளை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி மூலம் பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலகத்துக்கு கூட இதுகுறித்த தகவலை, நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai