Enable Javscript for better performance
"100% தேர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியம்'- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்கள் 100% தேர்ச்சி பெறும் நிலையை எய்திடும் வகையில் ஆசிரியர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.
    மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும், ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10, பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் காலாண்டுத்தேர்வு முடிவுகள், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் க. நந்தகுமார், தேர்ச்சி வீதம் குறைந்ததற்கான காரணம், மாணவர்களின் படிக்கும் திறனை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
    தொடர்ந்து, திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் பாட வாரியாக நடத்தப்படும் குறுந்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதையும், காலாண்டுத் தேர்வில் தேர்ச்சி வீதம் குறைந்துள்ள பள்ளிகளில் நடத்தப்பட்ட குறுந்தேர்வுகளுக்கான மாணவர்களின் கையேட்டையும், காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களையும் பார்வையிட்ட ஆட்சியர் பேசியது:
    மாணவ, மாணவிகளின் படிக்கும் திறன் மற்றும் நினைவாற்றலுடன் தேர்வு எழுதும் திறன் ஆகியவற்றையும் குறுந்தேர்வுகளின் மூலம் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். படிக்கும் திறன் குறைவாக உள்ள மாணவர்களின் மீது சம்பந்தப்பட்ட பாடத்தின் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி பயிற்சி அளிக்க வேண்டும்.
    மேலும், இனிவரும் காலங்களில் நடைபெற உள்ள தேர்வுகளில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெறும் நிலையை எய்திடும் வகையில் ஆசிரியர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றார் அவர். முன்னதாக, காலாண்டுத் தேர்வில் பாடவாரியாக 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் சம்பந்தப்பட்ட 99 பாட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார் ஆட்சியர் நந்தகுமார்.
    கூட்டத்தில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க. முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் இல. வெங்கடாஜலபதி, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், மணிவண்ணன் மற்றும் 85 அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும், ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பாடவாரியாக 80 சதவீதத்துக்கு குறைவாகவும், 10 ஆம் வகுப்பில் 70 சதவீதத்துக்கு குறைவாகவும் பெற்ற மாணவர்கள் பயிலும் பள்ளிகளின் சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai