Enable Javscript for better performance
கரும்புக்கான நிலுவைத்தொகையை அக். 29-க்குள் வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கரும்புக்கான நிலுவைத்தொகையை அக். 29-க்குள் வழங்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 15th October 2016 06:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலுவைத்தொகையை அக். 29-ம் தேதிக்குள் வழங்கவில்லையெனில், தீபாவளி தினத்தன்று கரும்பு விவசாயிகளின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்படும் என அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
    பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில், அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரும், அரியலூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவருமான ப. அன்பழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அ. வேணுகோபால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
    கூட்டத்தில், பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு 2016- 17 ஆம் ஆண்டின் அரைவைப் பருவத்துக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு, ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ. 42 கோடியை அக். 29-ம் தேதிக்குள் தமிழ்நாடு சர்க்கரைத் துறையும், தமிழக அரசும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    தவறும்பட்சத்தில் தீபாவளி தினத்தன்று கரும்பு விவசாயிகளின் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை தெரிவிப்பது.
    அதன் பிறகும் வழங்க தவறும்பட்சத்தில் நவ. 9-ம் தேதி பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிர்வாகத்தில் உள்ள அனைத்து கோட்ட அலுவலகத்துக்கும் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும். அகில இந்திய கூட்டமைப்பு சார்பில், அனைத்து ஆலைகளின் ஆலோசனைக் கூட்டத்தை திருச்சியில் நடத்துவது.
    பெரம்பலூர் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத் தராமல், ஆலையின் புனரமைப்பு மற்றும் இணை மின் உற்பத்தித் திட்டத்தை முன்னெடுக்காமல், விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு பதில் அளிக்காமல் செயல்பட்டுவரும் தமிழ்நாடு சர்க்கரைத் துறை ஆணையரின் செயலைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கூட்டத்தில், செந்துறை ஒன்றிய திமுக செயலர் மு. ஞானமூர்த்தி, பாமக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கோ. சீனிவாசன், பெரம்பலூர்
    மாவட்டத் தலைவர் பி. மாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai