சுடச்சுட

    

    எறையூர் சர்க்கரை ஆலையில் இயந்திரம் பழுது: 2,100 டன் கரும்புகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்

    By DIN  |   Published on : 04th January 2017 05:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sugarcane1

     

    பொதுத்துறை சர்க்கரை ஆலையான எறையூர் சர்க்கரை ஆலையில் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதால், அரைவைக்கு டிராக்டரில் கொண்டு வரப்பட்ட சுமார் 2,100 டன் கரும்புகளுடன் ஆலை எதிரே விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
    இந்த ஆலையில்  2016- 2017 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு 11,455 ஏக்கரில், 5,288 கரும்பு விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பை பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2.75 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  
    மேலும், 50 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், 25,000 மெட்ரிக் டன் கரும்பு சேத்தியாதோப்பில் உள்ள எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் கரும்பு பரிமாற்றம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எறையூர் சர்க்கரை ஆலை அரைவை பருவமானது, 16.5.2017 ஆம் தேதி வரை கரும்பு அரைவையை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி தொடங்கப்பட்ட அரைவைப் பணியானது இயந்திரக் கோளாறு காரணமாக 8- வது முறையாக பாதிக்கப்பட்டுள்ளது.    ஆலையில் தரமற்ற இயந்திரங்களால் அடிக்கடி பழுது ஏற்பட்டு, அரைவைப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், சுமார் 210-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் கொண்டு செல்லப்பட்ட கரும்பு சுமை ஆலை எதிரே நிறுத்தப்பட்டுள்ளதால், சுமார் 2,100 டன் கரும்பு காய்ந்து எடை குறைந்து இழப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
    இதையறிந்த ஆலை நிர்வாகம், விவசாயிகள் கொண்டுவந்த கரும்புகளை, வெளி ஆலைகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதனால், அலைச்சல் ஏற்படுவதோடு, கரும்பு காய்ந்து எடை குறைவு ஏற்பட்டு இழப்பீடு ஏற்படும் சூழல் நிலவுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.        எனவே, எறையூர் சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்கவும், புதிய இயந்திரங்கள் நிறுவவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai