சுடச்சுட

    

    விவசாயிகளுக்கு வழங்கப்படும் விருதுகளை  நம்மாழ்வார் பெயரில் வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    பெரம்பலூர் - வடக்கு மாதவி சாலையில் உள்ள உழவர் சந்தை மைதானத்தில் இயற்கை வேளாண்மை இயக்கம், தமிழ்க்காடு அமைப்பு சார்பில் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் 3 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரமேசு கருப்பையா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    இயற்கை வேளாண் ஆர்வலர்கள் மேலப்புலியூர் இளையராஜா, எளம்பலூர் ஆறுமுகம், சிறுவாச்சூர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நம்மாழ்வாரின் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
    தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் அங்ககச் சான்றிதழ்களை நம்மாழ்வார் பெயரில் வழங்க வேண்டும். இயற்கை வழி வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் கல்வியை மத்திய,
    மாநில அரசுகள் பாடத்திட்டமாக அறிவிக்க வேண்டும். ஆறுகள், ஓடைகளில் மணல் அள்ளுவதற்கு தடைவிதிக்க வேண்டும். இயற்கை விளைபொருள்களை கொள்முதல் செய்ய வேண்டும். நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களை வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பாரம்பரிய விதைகளை சாகுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறுதானியக் கண்காட்சி மற்றும் விற்பனை,கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது.  
    முன்னதாக, நம்மாழ்வாரின் உருவப் படத்துக்கு பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிகளில், முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அசன் முகமது,இயற்கை வேளாண் வல்லுநர் ஏகாம்பரம், பாரம்பரிய காய்கறி விதை சேகரிப்பாளர் முசிறி யோகநாதன் உள்பட இயற்கை ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai