சுடச்சுட

    

    பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்தாரின் பிறப்பு, இறப்புகளை முறையாக பதிவு செய்வது அவசியம் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் பி. வேலு.
    பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பிறப்பு-இறப்புகளை பதிவு செய்வது தொடர்பான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, அவர் மேலும் பேசியது:
    பொதுமக்கள் அனைவரும் தங்களது உற்றார், உறவினர்களின் பிறப்பு மற்றும் இறப்புகளை முறையாக பதிவு செய்வது அவசியம். பிறப்பு, இறப்புகளை பதிவு செய்யும்போது ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும்.
    அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பதிவுகளை அந்தந்த அரசு மருத்துவமனைகளிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்குள்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்திலும், இதர பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளை கிராம நிர்வாக அலுவலகத்திலும், குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள் பதிவு செய்யவேண்டும்.  
    பதிவு செய்யும்போது குழந்தைகளின் பெயர்களில் அல்லது அவர்களது பெற்றோரின் பெயரில் பதிவு செய்துகொள்ளலாம்.
    பெற்றோர் பெயர்களில் பதிவுசெய்த குழந்தைகளுக்கு, ஓராண்டு காலத்திற்குள் பெயர் சூட்டி பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். உரிய காலத்திற்குள் பதிவு செய்யாத குழந்தைகளின் பிறப்புகளை வட்டாட்சியர் அலுவலகம் சென்று, அதற்குரிய தொகையை செலுத்திய பிறகே பிறப்பை பதிவு செய்துகொள்ள முடியும்.
    இதே நடைமுறைதான் இறப்பு பதிவிற்கும் பொருந்தும். மேலும், அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கும் பாகப்பிரிவினை உள்ளிட்டவைகளுக்கும், பிறப்பு, இறப்பு பதிவு செய்தல் மிகவும் இன்றியமையாதது.
    எனவே, அனைத்துத்தரப்பு மக்களும் இறப்பு, பிறப்பு பதிவுகளை எவ்வித சுணக்கமும் இன்றி பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் காலம் தாழ்த்தாமல், விடுபாடின்றி பிறப்பு, இறப்பு குறித்த விவரங்களை முறையாக பதிவுசெய்ய முன்வர வேண்டும் என்றார் வேலு.
    இக்கூட்டத்தில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத், வட்டாட்சியர்கள் சீனிவாசன், தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதிதாசன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai