சுடச்சுட

  

  ஆய்வுக்கு பிறகு வறட்சி பாதித்த மாவட்டங்கள் அறிவிக்கப்படும்: அமைச்சர் தகவல்

  By DIN  |   Published on : 08th January 2017 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வறட்சி கண்காணிப்புக் குழுவின் ஆய்வுக்கு பின்னர், வறட்சி பாதித்த மாவட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார்
  சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி ந. நடராஜன். பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்யாததால் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் அமைச்சர் வெல்லமண்டி ந. நடராஜன் தலைமையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலரும், பெரம்பலூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலருமான பணீந்தரரெட்டி, ஆட்சியர் க. நந்தகுமார், எம்.பி.
  ஆர்.பி. மருதராஜா, எம்எல்ஏக்கள் இரா. தமிழ்ச்செல்வன், ஆர்.டி. ராமச்சந்திரன் முன்னிலையில் ஆட்சியரக கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதங்கள் குறித்தும், குடிநீர் பற்றாக்குறை குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார் அமைச்சர் நடராஜன்.
  இதன் பின்னர், பெரம்பலூர் வட்டத்துக்குள்பட்ட சத்திரமனை கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயப் பயிர்களையும், பொம்மனப்பாடி கிராமத்தில் மக்காச்சோளம் பயிர்களையும், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட காரை கிராமத்தில் பருத்தியையும், வேப்பூர் வட்டத்துக்குள்பட்ட ஒதியம் கிராமம், வேப்பந்தட்டை வட்டம், தேவையூர் கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களையும், நெய்குப்பை கிராமத்தில் பருத்தியையும் பார்வையிட்டு அமைச்சர் நடராஜன் கூறியது:
  பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், வெங்காயம், நெல், கரும்பு, எண்ணெய் வித்துக்கள் மற்றும் இதர பயிர்கள் 93,192 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது, இயல்பான சாகுபடி பரப்பான 1,10,500 ஹெக்டேரில் 84 சதவீதமாகும். சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவில் 70,649 ஹெக்டேர் அளவிற்கு பல்வேறு பயிர்கள் வறட்சியால் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரண உதவிகளை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க இயலாது. கணக்கெடுப்பு மேற்கொண்ட பிறகு, எந்தெந்த மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோ, அந்த மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என்றார் அமைச்சர் நடராஜன். மாவட்ட வருவாய் அலுவலர் பி. வேலு, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சிவ. முத்துக்குமாரசாமி, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சந்திரன், துணை இயக்குநர் அய்யாசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜகோபால், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai