Enable Javscript for better performance
"மற்றவர்கள் எண்ணத்தை உணரும்போது மனிதம் புதுப்பிக்கப்படும்'- Dinamani

சுடச்சுட

  

  "மற்றவர்கள் எண்ணத்தை உணரும்போது மனிதம் புதுப்பிக்கப்படும்'

  By DIN  |   Published on : 09th January 2017 03:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  மற்றவர்கள் எண்ணத்தை உணரும்போது மனிதம் புதுப்பிக்கப்படும் என்றார் தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியின் தமிழத் துறைப் பேராசிரியர் முனைவர் அ. சுபா.
  பெரம்பலூரில், பதியம் இலக்கியச் சங்கமம் சார்பில் புதியதோர் உலகம் செய்வோம் எனும் தலைப்பில் அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை உதவி பேராசிரியர் முனைவர் க. தமிழ்மாறன் தலைமையில் பேச்சரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
  உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். நதி தானாகவே கடந்து சென்று கடலில் கலப்பது இயல்பானது. இதை அணை கட்டி வயலுக்குப் பாய்ச்சி சாதிப்பது போல நமது 6 ஆம் அறிவு, புதிய உலகம் சமைப்பதற்குத் தான். மற்றவர்கள் எண்ணத்தை உணரும்போது மனிதம் புதுப்பிக்கப்படும். வளர்ப்புப் பிராணிகளையும், இயந்திரங்களையும் நம்பும் அளவுக்கு, மனிதன் சக மனிதனை நம்புவதில்லை. மோட்சம்,நரகம் கதைகள் இன்று நகைச்சுவையாகிப் போனது.
  கல்வி எழுச்சி கொள்ளச் செய்யும் என்று நம்பியிருந்தபோது, அது தவறு செய்பவர்களை மிகுதியாக்கி விட்டதென சமூக ஆர்வலர்கள் கவலை கொள்கின்றனர். ஏமாற்றுதலும், ஏமாறுதலும் அன்றாடம் நிகழ்வாகிப்போனது. இன்சொல் கூறுதல் இன்றைய உலகிற்கு உடனடித் தேவையாகும். பிறரை மதித்தல் இன்றைய உலகின் ஆதாரமாகும். இன்றையக் காலத்தில் சகிப்புத் தன்மையாகிய பொறுமை மிக மிக தேவை. நட்பு ஒன்றே உலக தேசிய கீதமாக மாண்புற வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனின் உடலையும்,உள்ளத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வோம். உணவுப் பொருள்களைத் தரப்படுத்துவோம். குழந்தைகளின் உணவுகளில் கவனம் கொண்டு, நுகர்வோர் விழிப்புணர்வை அடிப்படையாக்குவோம். தாய்மொழி இழிவுபடுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்துவோம்.
  இயந்திரத்தையும்,கணிப்பொறியையும் 2 ஆம் இடத்தில் வைத்துவிட்டு மனிதத்தைப் போற்றுவோம். பெண்கள் மேலும் மன முதிர்ச்சி அடைந்து உயர்வடையட்டும். இளைய சமூகம் மனித உழைப்பையும், இதயங்களையும் நேசிக்கட்டும். மர நிழலாய் உலகில் சிகர வாழ்க்கை வாழ்வோம் என்றார் முனைவர் சுபா.
  தொடர்ந்து, தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி தமிழ்த் துறை உதவி பேராசிரியர் செந்தில்நாதன், தம்பிரான்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மலர்க்கொடி, திருவள்ளுவர் தவச்சாலை நிர்வாகி காப்பியன், சமூக ஆர்வலர் சாரங்கபாணி, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஜெயபால், கவிஞர் ராஜா ஆகியோர் புதியதோர் உலகம் செய்வோம் தலைப்பில் பேசினர்.
  நிகழ்ச்சிக்கு,பெரம்பலூர் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் வ. சுனில் சகாயராஜ்  முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் இரா. ராஜா வரவேற்றார். கவிஞர் செந்தில்குமரன் நன்றி கூறினார்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai