சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நிறைந்து காணப்படும் மக்கள் குறைதீர் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.
    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொது மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில், திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
    இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கிராமப்புற மக்கள், சுய தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, குடிநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களை அளித்து வருகின்றனர்.
    இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வேலு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது. மனு எழுதுமிடத்திலும், மனுவை பதிவு செய்யும் இடத்திலும் பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. மாவட்டத்தில் மானாவாரி சாகுபடியான மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் ஆகிய பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. நிகழாண்டு ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த பயிர்களுக்கு போதுமான மழை இல்லாததால் பருத்தி, மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்த விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு, இழப்பீடு கோரியுள்ளனர். இதனால், குறைதீர் கூட்டத்திற்கு பலர் வராமல் போனதற்கு காரணமாக கூறப்படுகிறது.
    இருப்பினும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் காட்டும் அலட்சியமும், ஒரு காரணமாக கூறப்படுகிறது.
    ஆட்சியருக்காக காத்திருந்த முதியோர்:
    திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொது மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், தற்போதுள்ள மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார், பொது மக்கள் குறைதீர் கூட்டம், அரசு விழாக்கள் உள்ளிட்ட பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கிடையாது.
    இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றதால், மாவட்ட வருவாய் அலுவலர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
    இதனிடையே, மனு அளிக்க வந்திருந்த கிராமப்புற பெண்களும், நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை கோரி மனு அளிக்க வந்த முதியோர்களும் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தால் உரிய தீர்வு கிடைக்கும் என நீண்டநேரம் காத்திருந்தனர்.
    இதையறிந்த காவலர்கள், கூட்டத்திற்கு ஆட்சியர் வரவில்லை என்ற தகவலை முதியோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, வருவாய் அலுவலரிடம் மனு அளித்துசென்றனர்.
    பொது மக்களிடமிருந்து நேரிடையாக மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெறாததால் மனுக்களின் எண்ணிக்கையும், பொது மக்களின் கூட்டமும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.திங்கள்கிழமை தோறும் சராசரியாக 400 முதல் 470 மனுக்கள் பெறப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் 205 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai