சுடச்சுட

    

    விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் 4 அரசுப் பேருந்துகள் ஜப்தி

    By DIN  |   Published on : 12th January 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விபத்துக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், 4 அரசுப் பேருந்துகள் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
    புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் விஜயகுமார் (35). இவர், தனியார் இரும்பு உருக்காலையில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3.3.2013ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து மோதியதில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, திருச்சி நவல்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
    அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி விஜயகுமார் மனைவி கவிதா (26) பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 23.4.2013-ல் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த 11.8.2015ஆம் தேதி வழக்கை விசாரித்து கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் விபத்தில் உயிரிழந்த விஜயகுமார் குடும்பத்தினருக்கு, ரூ. 12 லட்சத்து 48 ஆயிரத்து 200 வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
    ஆனால், அதிகமான இழப்பீட்டுத் தொகை கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 24.2.2016-ல் வழக்கை விசாரித்த நீதிபதி, விஜயகுமார் குடும்பத்தினருக்கு ரூ. 34.80 லட்சம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டார். ஆனால், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தினர் இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை.
    இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுமாறு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ. நஷிமா பானு, விபத்தில் உயிரிழந்த விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை ரூ. 34.80 லட்சத்தை, வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ. 44 லட்சத்து 65 ஆயிரத்து 800- ஐ கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் வழங்கவும், மேலும் போக்குவரத்து கழகத்திற்குரிய 4 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய வேண்டும் எனவும் செவ்வாய்க்கிழமை (ஜன. 10) உத்தரவிட்டார்.  
    இதைத்தொடர்ந்து, திருச்சி- சென்னை வழித்தடத்தில் சென்ற பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 அரசுப் பேருந்துகளை நீதிமன்ற ஊழியர் புதன்கிழமை ஜப்தி செய்தனர். ஜப்தி செய்யப்பட்ட 4 பேருந்துகளும் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai