சுடச்சுட

    

    விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை பெற்றுத் தர நடவடிக்கை: ஆட்சியர் பேச்சு

    By DIN  |   Published on : 12th January 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
    வேப்பந்தட்டை வட்டத்திற்குள்பட்ட நூத்தப்பூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில், 237 பயனாளிகளுக்கு ரூ. 1.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் மேலும் பேசியது:
    இந்த முகாம் மூலம், பல்வேறு துறைகள் சார்பில் 237 பயனாளிகளுக்கு
    ரூ. 1,26,39,905 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  
    தமிழகத்தை வறட்சி மாநிலமாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  
    மேலும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்கள் அனைத்தும் மத்திய காலக் கடனாக மாற்றி அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை நாள்கள் 150 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது.  
    விவசாயிகள் குறைந்த நீரில் சாகுபடி செய்யும் தொழில்நுட்ப முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, சொட்டுநீர் பாசன அமைப்புகளை ஏற்படுத்தி விவசாயம் செய்ய முன்வர வேண்டும்.
    நிகழாண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சொட்டுநீர் பாசன அமைப்புகள் ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே சொட்டுநீர் பாசன அமைப்பு ஏற்படுத்த விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும், அரசு அறிவிக்கவுள்ள நிவாரண உதவிகள் மற்றும் பயிர்க் காப்பீட்டுத்
    திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தரத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என்றார் ஆட்சியர் நந்தகுமார்.
    வருவாய்க் கோட்டாட்சியர் (பொ) மு. துரை, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் புஷ்பவதி, மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மூர்த்தி, வருவாய் வட்டாட்சியர் மனோண்மணி, சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai