சுடச்சுட

  

  கேந்திரிய வித்யாலய பள்ளியின் கட்டுமானப் பணி விரைவில் தொடங்குகிறது

  By DIN  |   Published on : 17th January 2017 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூரில் இயங்கிவரும் கேந்திரிய வித்யலாய பள்ளிக்கான கட்டுமானப் பணி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படுவதாகத் தெரிகிறது.
   மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை மூலம் இயங்கும் கேந்திரிய வித்யாலய பள்ளி கடந்த 2009-ல் பெரம்பலூரில் தொடக்கப்பட்டது. பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள அரசு பிற்பட்டோர் நல மாணவிகள் விடுதி வளாகத்தில் தாற்காலிகமாக தொடங்கிய இப்பள்ளியில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ளது.
  இப்பள்ளியில் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குழந்தைகள், மிகவும் பிற்பட்ட மற்றும் ஏழை, எளிய குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.   
  இப்பள்ளிக்கு நிரந்தரக் கட்டடம் கட்ட பெரம்பலூர் மதனகோபல சுவாமி கோயிலுக்குச் சொந்தமான, ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் அருகே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, கட்டடப் பணிக்கு ரூ. 78 லட்சத்தை அரசு நிர்ணயம் செய்தது.
  இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் பெற்றோர், பொதுமக்கள், வர்த்தக பிரமுகர்கள், கல்வியாளர்கள் ஆகியோரிடமிருந்து ரூ. 78 லட்சம் நிதி வசூலிக்கப்பட்டு, கடந்த 2013 ஜூலை 27 ஆம் தேதி இந்துசமய அறநிலையத் துறையிடம் அந்தப் பணம் வரைவோலையாக வழங்கப்பட்டது.
  இதையடுத்து, அரசின் பரிசீலனைகள் முடிக்கப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட விளையாட்டு அரங்குக்குப் பின்புறமுள்ள 5 ஏக்கர் நிலம் பள்ளிக் கட்டடத்துக்கு ஒதுக்கப்பட்டு பத்திரப் பதிவும் செய்யப்பட்டது.ஆனால், நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலியிடத்துக்கு கட்டடம் கட்ட முன் நுழைவு கடிதமும், அரசாணையும் வெளியிடப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுமானப் பணி தொடங்கவில்லை. இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில், கேந்திரிய வித்யாலய பள்ளித் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான க. நந்தகுமார், மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா ஆகியோரிடம் பள்ளிக் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கி, கட்டுமானப் பணி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
  இதைத்தொடர்ந்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கேந்திரிய வித்யாலய பள்ளி கட்டடம் கட்ட ரூ. 24 கோடியை ஒதுக்கீடு செய்ய அனுமதித்தது. முதல்கட்டாக ரூ. 18 கோடி ஒதுக்கீடு செய்து, கட்டுமானப் பணியை தொடங்க மத்திய பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
  இதையடுத்து, பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு கடந்த 25 ஆம் தேதி ஒப்பந்தம் விடப்பட்டு, டிசம்பர் மாதம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாருக்கு கட்டடம் கட்ட அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், இன்னும் ஒரு வாரத்தில் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் கேந்திரிய வித்யாலய பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கரில், ஆசிரியர்களுக்கான குடியிருப்புடன் கூடிய பள்ளிக் கட்டுமானப் பணிக்கு பூமிபூஜை தொடங்கப்படவுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai