சுடச்சுட

    

    ஜல்லிக்கட்டு தொடரும் போராட்டம்: 7,500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 20th January 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வலியுறுத்தியும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
    பீட்டா அமைப்பை ரத்து செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு மீதான தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விவசாயத்தை மீட்டெடுத்து, விவசாயிகளின் உயிரைப் பாதுகாக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க வேண்டும்.
    ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் புதன்கிழமை காலையிலிருந்து தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    இவர்களுக்கு ஆதரவாக, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள், குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக் கழகக் கல்லூரி, தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சாரதா மகளிர் உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
    அரியலூர்.... ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி அரியலூர் மாவட்டத்தில்  சுமார் 2,500 பேர் 5ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர் மாவட்டத்தில் கடந்த 15 ஆம் தேதி முதல் திருமானூர்,கோக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் போராடி வருகின்றனர். புதன்கிழமை அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி,கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பேருந்து நிலையம் முன் இரவு பகலாகப் போராடி வருகின்றனர். வியாழக்கிழமையும் அவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.அப்போது அவர்கள் பீட்டாவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
    மேலப்பழுவூரில் கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட தகவலறிந்த போலீஸார் வந்து நடத்திய பேச்சுவார்த்தையால் மறியலைக் கைவிட்டு தர்னாவில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருச்சி - சிதம்பரம் சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கீழப்பழுவூர், திருமானூர் பகுதிகளில் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஏலாக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.அரியலூர் பொறியியல் கல்லூரி,அரசு பாலிக்டெக்னிக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைரப் புறக்கணித்து பேரணியாகச் சென்று கீழப்பழுவூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செந்துறை நமங்குணம் கிராமத்தில் அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    புறநகர்ப் பேருந்து நிலைய வளாகம்...
    தமிழன ஆர்வலர்கள் சார்பில் புதன்கிழமை இரவு முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரி தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் பீட்டா அமைப்பிற்கு பாடை அமைத்து, அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்காததைக் கண்டித்து நாயிடம் மனு அளித்தனர்.


    புதுவேட்டக்குடி...
    குன்னம் அருகே புதுவேட்டக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், இளைஞர்களும் காளைகளுடன் பங்கேற்றனர். மேலும், வெளிநாட்டு குளிர்ப்பானங்களுக்கு தடை கோரி சாலையில் அந்தக் குளிர்ப்பான பாட்டில்களை உடைத்தனர். இதேபோல, வேப்பூர், திருமாந்துறை, வயலூர், வயலப்பாடி, கிழுமத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேப்பந்தட்டை...
    இங்குள்ள பேருந்து நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், காளைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூலாம்பாடியில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாடாலூர்...
    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று 3 காளைகளுடன் ஊர்வலமாகச் சென்ற 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஊட்டத்தூர் பிரிவுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று நடத்திய பேச்சுவார்த்தையால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.                    

    அம்மாபாளையம்...
    அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து, பள்ளி எதிரே மறியல் செய்தனர். போலீஸாரின் பேச்சுவார்த்தையால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், பெரம்பலூர்- துறையூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.           

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai