சுடச்சுட

    

    ஜல்லிக்கட்டு: வலுக்கும் போராட்டம்: இளைஞர்களுடன் கைகோர்த்த பொதுமக்கள்

    By DIN  |   Published on : 21st January 2017 06:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து போராட்டம், சாலை மறியல், தடையை மீறி ஜல்லிக்கட்டு ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், மாணவர்களும்  புதன்கிழமை காலையிலிருந்து தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    இந்த மாணவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், வணிகர் சங்கங்கத்தினர், உணவக உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் அனைத்து ரசிகர் மன்றத்தினர் ஆகியோர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலைத்திலிருந்து, பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
    மேலும், பெரம்பலூர் நகரை சேர்ந்த இளம் பெண்கள், குழந்தைகளுடன் பெற்றோர், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
    அரியலூர் மாவட்டத்தில்... ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் அரியலூர் மாவட்டத்தில் 6 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது.
    ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, அரியலூர் மாவட்டத்தில் கடந்த 15 ஆம் தேதி முதல் திருமானூர், கோக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதேபோல், அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் போராட்டம் வெடித்தது. மேலப்பழுவூரில், கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியலை கைவிட்ட மக்கள் தொடர்ந்து தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருச்சி-சிதம்பரம் சாலையில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கீழப்பழுவூர், திருமானூர் பகுதிகளில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏலாக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அரியலூர் பொறியியல் கல்லூரி, அரசு பாலிக்டெக்னிக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு அங்கிருந்து பேரணியாக சென்று கீழப்பழுவூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செந்துறை நமங்குணம் கிராமத்தில் அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காளையுடன் பேரணி
    ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், அரியலூர் பேருந்து நிலையம் முன்பு அமர்ந்து இரவு பகல் பாராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை அவர்கள் காளையுடன் பேரணியாகச் சென்று பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருமானூரில்...
    திருமானூர் பேருந்து நிலையத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மக்கள் சேவை இயக்கத்தினர் தொடர்ந்து 6-வது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதேபோல், வாரணவாசி, மேலப்பழுவூர் ஆகிய இடங்களில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர்.இதனால் திருச்சி-சிதம்பரம் சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வி.கைகாட்டியிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செந்துறையில்...
    செந்துறை பகுதிக்கு உட்பட்ட செந்துறை, இடையாக்குறிச்சி, நமங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இடையாக்குறிச்சியில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியலை கைவிட்டு, சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நூதன போராட்டம்
    பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் தமிழின உணர்வாளர்கள் சார்பில், புதன்கிழமை இரவு முதல் தொடர்ந்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வது போல நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இளைஞர் ஒருவருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஜயங்கொண்டத்தில்...
    ஜயங்கொண்டத்தில் ஒன்றிய அலுவலகம் முன்பாக இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், சிறார்கள் பலர் கலந்துகொண்டு ஜல்லிகட்டு நடத்த வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும், கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்கள், உணவுப் பண்டங்களை தடை செய்ய வலியுறுதி மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  
    இதேபோல், ஜயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடி கிராமத்தில் திருச்சி-சிதம்பரம் சாலையில் அமர்ந்து இளைஞர்கள் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.  அவர்களிடம் ஜயங்கொண்டம் வட்டாட்சியர் திருமாறன், ஜயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் சுப்ரமணியன் ஆகியோர் போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம் என கூறியதன்பேரில், மறியல் கைவிடப்பட்டது. குறுக்கு சாலை, மருதூர், ஆண்டிமடம், காடுவெட்டி, ராங்கியம், கொடுக்கூர் உள்ளிட்ட பல கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜயங்கொண்டம் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்ற இளைர்கள் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர் பானங்களுக்கு மாலை அணிவித்து இறுதி ஊர்வலம் நடத்தினர்.  ஆண்டிமடத்தில் வணிகர் சங்கத்தினர் காளை மாட்டுடன் பேரணியாக முக்கிய வீதிகள் வழியே சென்று அஞ்சல்அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    தடையை மீறி ஜல்லிக்கட்டு
    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட சில்லக்குடி கிராமத்தில் தடையை மீறி நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 10-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இவற்றை, சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளைஞர்களும், மாடுபிடி வீரர்களுடம் அடக்க முயற்சித்தனர். அன்னமங்கலம், கிருஷ்ணாபுரம், பாடாலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கிராமப்புற மக்களும், இளைஞர்களும் காளைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல, பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, அரசு பணியாளர்கள் சங்கத்தினரும், பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய பகுதியில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் எதிரே தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தினரும், துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரே சாலைப்பணியாளர்கள் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.     

    சாலை மறியல்
    பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர், செஞ்சேரி, குன்னம், துங்கபுரம் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும், பொதுமக்களும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
    இதனால், மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னம் அருகேயுள்ள நல்லறிக்கை கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai