சுடச்சுட

    

    ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சார்பில் கடந்த 5 நாள்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், இளம்பெண்கள், மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு
    நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. கூட்டம் அதிகரிப்பதால் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருவழி சாலை முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது.
    இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு சனிக்கிழமை அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை கலைந்து செல்லுமாறு பெரம்பலூர் போலீஸார் சனிக்கிழமை இரவு அறிவுறுத்தினர்.
    இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவர்கள், நிரந்த தீர்வு வேண்டும் என முழக்கமிட்டு,  போராட்டத்தில் இருந்து கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் கடந்த 5 நாள்களாக, தமிழின ஆர்வலர்கள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கிருந்த ஒலிபெருக்கிகளையும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அப்புறப்படுத்தினர்.
    பாடாலூரில், கடந்த 4 நாள்களாக அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அன்னமங்கலம் கிராமத்தில், மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    ஒலிபெருக்கி, நாற்காலிகளை பறிமுதல் செய்த போலீஸார்
    ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதையடுத்து, பெரம்பலூர் ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்தி வருவோரை கலைந்து செல்லுமாறு போலீஸார் சனிக்கிழமை இரவு அறிவுறுத்தினர். இதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, கடந்த 4 நாள்களாக வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை கட்டுவதற்கு அனுமதி கிடையாது எனவும், அவற்றை அப்புறப்படுத்துமாறும் போலீஸார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், மாணவர்கள் அந்த ஒலிபெருக்கிகளை அப்புறப்படுத்தாததால், அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர்.
    சனிக்கிழமை பெய்த மழையால் நாற்காலியில் அமர்ந்திருந்த இளைஞர்களுக்கு மறுப்பு தெரிவித்து, 1,000-க்கும் மேற்பட்ட நாற்காலிகளையும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


    குளிர்பானங்களை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம்
    ஜயங்கொண்டம் வர்த்தக சங்கம் சார்பில், வர்த்தக சங்க வட்ட செயலாளர் சரவணன்  தலைமையில் ஜயங்கொண்டம் பேருந்து நிலையம் முன்பு 2 காளைகளுடன் வர்த்தக சங்கத்தினர், சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என 100 -க்கும் மேற்பட்டோர் திரண்டு, வெளிநாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டி பீட்டாவுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை காட்டினர். மேலும் அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் தேவையில்லை நிரந்தர சட்டம் வேண்டும் என்று முழக்கமிட்டனர்.


    பெரம்பலூரில் மின் ஊழியர்கள் பேரணி
    ஜல்லிக்கட்டுக்கு நிர்ந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.பெரம்பலூர் வட்டக்கிளை சார்பில் நடைபெற்ற இந்த பேரணி, துறைமங்கலம் 3 சாலை சந்திப்பு பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர்.வட்ட செயலர் எஸ். அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, சங்க நிர்வாகி ஆர். ராஜகுமாரன் தொடக்கி வைத்தார். இதில், 100 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.    

    திருமானூரில்...
    திருமானூர் பேருந்து நிலையத்தில் மாணவர்கள்,இளைஞர்கள் மற்றும் மக்கள் சேவை இயக்கத்தினர் தொடர்ந்து 8 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டத்தை தொடர்ந்தனர். ஏலாக்குறிச்சி, திருமழபாடி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

    மேலப்பழுவூரில்...
    மேலப்பழுவூர், கீழப்பழுவூர், கல்லகம் ரயில்வே கேட் ஆகிய பகுதிகளில் இளைஞர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அவர்கள் சாலையோரத்தில் அமர்ந்து பீட்டாவுக்கு எதிராக முழக்கமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலால் திருச்சி-சிதம்பரம் சாலையில் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


    அரியலூர் மாவட்டத்தில்....
    அரியலூர் மாவட்டத்தில் 8 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் தேவையில்லை, நிரந்தர சட்டம் வேண்டும் என வலியுறுத்தினர். அரியலூர் மாவட்டத்தில் கடந்த 15 ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் பேருந்து நிலையம் முன்பு இரவு பகலாக இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai