சுடச்சுட

  

  தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 300 கோடியை வழங்க வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 23rd January 2017 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இலவச கட்டாய கல்வித் திட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 300 கோடியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் தமிழ்நாடு நர்ஸரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலைப் பள்ளி, சிபிஎஸ்சி பள்ளி சங்கத்தின் மாநில பொதுச் செயலர் நந்தகுமார்.
  பெரம்பலூரில், இந்தச் சங்கத்தின் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் மாநாடு மாவட்டத் தலைவர் மாணிக்கம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  இக்கூட்டத்தில் பங்கேற்ற மாநில பொதுச் செயலர் நந்தகுமார் மேலும் பேசியது:
  கடந்த 2015-16, 2016-17 ஆம் ஆண்டுகளுக்கு தமிழக அரசு இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 300 கோடி நிதியை உடனடியாக அளிக்க வேண்டும். இல்லாவிடில், வரும் கல்வியாண்டில் இலவச கட்டாய கல்வி முறை சட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெறாது.
  அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ள 10 ஆயிரம் பள்ளிகளுக்கு உடனடியாக அங்கீகாரம் அளிக்க வேண்டும். மேலும், அந்தப் பள்ளிகளில் பயிலும் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளை அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
  பழைய தனியார் பள்ளி கட்டடங்களுக்கு, உள்ளூர் திட்ட குழும அனுமதி பெறவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி பள்ளி கட்டடங்களுக்கு உள்ளூர் திட்ட குழும அனுமதி கேட்கக்கூடாது. பள்ளி வாகனங்களுக்கு ஓராண்டில் 4 முறை தகுதி சான்று பெற வேண்டும் என்பதை ரத்து செய்துவிட்டு, தனியார், அரசுப் பேருந்து மற்றும் இதர வாகனங்களுக்கு உள்ளதுபோல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தகுதிச் சான்று பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
  கூட்டத்தில் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலர் ஸ்ரீதர் பேசினார்.
  மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தசாமி, தர்மராஜ், முருகேசன், ஷாமின்ஷா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நிர்மலா சந்திரசேகர், பள்ளி தாளாளர்கள் பழனிவேல், கணேசன், பாண்டியன், மித்ரா, ராம்குமார், ராஜாசிதம்பரம், சரவணன் உள்பட பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி தாளாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
  பெரம்பலூர் மாவட்ட செயலர் குணசேகரன் வரவேற்றார். அரியலூர் மாவட்ட செயலர் பெரியசாமி நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai