சுடச்சுட

  

  விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

  By DIN  |   Published on : 24th January 2017 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விபத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்காததால், நீதிமன்ற உத்தரவின்பேரில் அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
  பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பொன்னகரம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன் (50). இவர் கடந்த 28.6.2005 அன்று தனது பேத்தி பிரியதர்ஷினியுடன் (4) எறையூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
  அப்போது, நரிஓடை என்ற பகுதியில் வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ரெங்கநாதன் உயிரிழந்தார். குழந்தை பிரியதர்ஷினி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாள். இதுகுறித்து மங்களமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.  
  இதனிடையே, திருச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி, ரெங்கநாதன் மனைவி பவுனம்மாள், அவரது மகன்கள் சிங்காரவேலு, செல்வராஜ் ஆகியோர் கடந்த 5.12.2007 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  
  விபத்தில் உயிரிழந்த ரெங்கநாதன் மற்றும் பிரியதர்ஷினி குடும்பத்தினருக்கு அரசு போக்குவரத்து கழகத்தினர் ரூ. 3 லட்சத்து 8 ஆயிரம் வழங்க வேண்டுமென, கடந்த 19.1.2007 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்,பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.
  பின்னர், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுமாறு பெரம்பலூர் மாவட்ட முதன்மை  அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 18.1.2017-ல் வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சத்து 8 ஆயிரத்தை, வட்டியுடன் சேர்த்து ரூ. 5 லட்சத்து 78 ஆயிரத்து 148 வழங்க வேண்டும்; போக்குவரத்து கழக அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும் நீதிபதி ஏ. நஷிமாபானு உத்தரவிட்டார். இதையடுத்து, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai