சுடச்சுட

  

  கருகிய பயிர்களுடன் மத்தியக் குழுவினரை முற்றுகையிட்ட விவசாயிகள்

  By DIN  |   Published on : 26th January 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்டத்தில் புதன்கிழமை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்தியக் குழுவினரை கருகிய பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.  
  வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததால், பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சியால் பயிர்கள் கருகி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதை பார்வையிடுவதற்காக மாநில சமூக பாதுகாப்பு திட்ட ஆணையர் மகேஸ்வரன் தலைமையில், கணேஷ்ராம், பால்பாண்டியன், ஸ்ரீரத்னபிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பெரம்பலூருக்கு புதன்கிழமை வந்தனர்.
  தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலர் ஆர். ராஜாசிதம்பரம் தலைமையிலான விவசாயிகள், வறட்சியால் பாதிக்கப்பட்ட பருத்தி, மக்காச் சோளம், வெங்காயம், கரும்பு, நெல், மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை, காண்பித்து, உரிய நிவாரணம் வழங்க கோரி மத்தியக் குழுவினரை நேரில் சந்தித்து முறையிடுவதற்காக பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் மத்தியக் குழுவினர் தங்கியிருந்து நட்சத்திர உணவகத்திற்கு சென்றனர்.
  ஆனால், மத்தியக் குழுவினரை சந்திக்க வருவாய்த்துறை அலுவலர்களும், போலீஸாரும் அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மத்தியக் குழுவினரை சந்திக்க வேண்டுமெனக் கோரி, மத்தியக் குழுவினரின் வாகனத்தின் எதிரே அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். இதைத்தொடர்ந்து, மத்திய குழுவினரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மத்தியக் குழுவினரிடம் வறட்சியால் கருகிய பயிர்களை காண்பித்து அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணத் தொகையை அதிகமாக வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
  தொடர்ந்து, மத்திய குழுவினரிடம் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலர் ஆர். ராஜாசிதம்பரம் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  நிகழாண்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக மானாவாரி பயிர்களான பருத்தி, மக்கா சோளத்தில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் நீர்பாசனத்தால் சாகுபடி செய்துள்ள கரும்பு, மஞ்சள், வெங்காயம், மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் மகசூல் குறைந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்குள்ளான விவசாயிகள் சிலர் உயிரிழந்துள்ளனர். மேட்டூர் அணையில் 90 அடிக்கு மேல் நீர்மட்டம் உயரும்போது திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பாசனத்திற்காக புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு நீர்வரத்து இல்லாததால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
  மானாவாரி பயிர்களுக்கு ரூ. 3 ஆயிரமும், நெல், கரும்பு, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு ரூ. 5,625 நிர்ணயித்து, இடுபொருள் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது மிக குறைவானதாகும்.
  எனவே, மத்திய அரசின் பிரதமர் வேளாண் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்யும் பயிர்களுக்கு இயற்கை இடர்பாடு நிதியிலிருந்து மக்காச் சோளம் ஏக்கருக்கு ரூ.
  17,500, பருத்திக்கு ரூ. 21 ஆயிரம், நெல்லுக்கு ரூ. 25 ஆயிரம், வெங்காயத்திற்கு ரூ. 28 ஆயிரமும், கரும்புக்கு ரூ. 49 ஆயிரம் நிர்ணயம் செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  மத்தியக் குழுவினர் ஆய்வு
  குன்னம் வட்டம், பேரளி கிராமத்தில் பாதிக்கப்பட்ட பருத்தி, ஒதியம் மற்றும் குன்னம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்காச் சோள பயிர்களை பார்வையிட்டு மத்தியக் குழுவினர், வறட்சியால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
  பின்னர் விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்த மத்தியக் குழுவினர், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து, மத்திய அரசிடம் தங்களது அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும். விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து, பேரளி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.
  ஆய்வுகளின்போது, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் மா. சந்திரகாசி, மாவட்ட வேளாண் துணை இயக்குநர் அய்யாசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜகோபால், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ராஜாமணி, உதவி இயக்குநர் இந்திரா ஆகியோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai