சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 150 பயனாளிகளுக்கு ரூ. 1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா முன்னிலையில், தேசிய கொடியேற்றி வைத்து, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
    தொடர்ந்து சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 12 நபர்களுக்கு பொன்னாடை அணிவித்துக் கெளரவித்தார் ஆட்சியர்.
    மேலும், சிறப்பாகப் பணிபுரிந்த 13 காவலர்களுக்கு முதல்வரின் பதக்கங்கள், 24 காவலர்களுக்கு சேவைச் சான்றிதழ்கள், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த 191 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் அளித்தார் மாவட்ட ஆட்சியர்.
    பின்னர், முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் போரில் உயிரிழந்தவர் குடும்பத்தின் வருடாந்திரப் பராமரிப்பு மானியமாக ரூ. 25 ஆயிரம், வேளாண் துறை சார்பில் 16 பேருக்கு ரூ. 18 லட்சத்து 34 ஆயிரத்து 600 மதிப்பிலான வேளாண் கருவிகள், வேளாண் பொறியியல் துறை சார்பில் ஒருவருக்கு ரூ. 1.14 லட்சத்திலான வேளாண் இயந்திரம், கூட்டுறவுத் துறை மூலம் 42 பேருக்கு ரூ. 7.20 லட்சத்தில் கடனுதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 3 பேருக்கு ரூ. 2.07 லட்சத்திலான நலத் திட்டங்கள், வருவாய்த்துறை சார்பில் திருமண நிதியுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, இயற்கை மரண நிதியுதவி என பல்வேறு திட்டங்களின் கீழ் 68 பேருக்கு ரூ. 34.92 லட்சத்தில் நலத்திட்டங்கள், தாட்கோ மூலம் 4 நபர்களுக்கு ரூ. 39.30 லட்சத்தில் நலத்திட்டங்கள் என, பல்வேறு துறைகள் சார்பில் 150 பேருக்கு ரூ. 1 கோடியே 25 லட்சத்து 95 ஆயிரத்து 476 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.      தொடர்ந்து   பள்ளி  மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்றோருக்கு  பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன.   வருவாய்க் கோட்டாட்சியர் இரா. பேபி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச. மாரிமுத்து, வேளாண்துறை துணை இயக்குநர் அய்யாசாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ராஜாமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் மோகன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai